அ.தி.மு.க. அரசு மீண்டும் ஆட்சியை தொடர இந்திய குடியரசு கட்சி துணை நிற்கும் மத்திய மந்திரி பேச்சு

தமிழகத்தில் அ.தி.மு.க. அரசு மீண்டும் வரவிருக்கிற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தொடர இந்திய குடியரசு கட்சி (அத்வாலே) துணை நிற்கும் என்று சென்னையில் மத்திய மந்திரி ராம்தாஸ் அதுவாலே கூறினார்.

Update: 2021-02-24 15:49 GMT
சென்னை, 

இந்திய குடியரசு கட்சியை (அத்வாலே) சேர்ந்த மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளிக்கும் துறையின் இணை மந்திரி ராம்தாஸ் அத்வாலே சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேற்று வருகை தந்தார். மாநில தலைவர் எம்.ஏ.சூசை உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர் வள்ளுவர் கோட்டத்தில் தேர்தல் பிரசாரத்தை மந்திரி ராம்தாஸ் அத்வாலே தொடங்கி வைத்து பேசியதாவது:-

தமிழகத்தில் பொதுமக்கள் நலன் சார்ந்த பல்வேறு நலதிட்டங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு செயல்படுத்தி வருகிறது. அதற்கு உறுதுணைாயக நிற்கும் வகையில் மத்திய மந்திரி சபையில் அங்கம் வகிக்கும் குடியரசு கட்சி, சென்னை மாநகரை பசுமை மாநகராக மாற்றுவதற்கு மத்திய அரசிடம் இருந்து சிறப்பு நிதியை பெற்றுத்தரும். தமிழக நலனை தேசிய அளவில் உயர்த்துவதற்கும், தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் அ.தி.மு.க. அரசு மீண்டும் ஆட்சியை தொடர இந்திய குடியரசு கட்சி துணை நிற்கும்.

விவசாயிகளுக்கு 5 ஏக்கர் நிலம்

டெல்லியில் நடைபெற்ற தேசிய பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் தமிழகத்தில் பட்டியல் இனத்தவர்களக்கு வீடு மற்றும் நிலம் இல்லாத விவசாயிகளுக்கு 5 ஏக்கர் நிலம் வழங்க கோரி வருகிற 25-ந்தேதி கோரிக்கை பேரணி நடத்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

சிறுகுறு விவசாய மக்கள், வேளாண் குடிமக்கள் நலமுடன் வாழ்வில் முன்னேற திட்டம் வகுக்க கோரிக்கை வைத்து செயல்பட வைப்போம். தொடர்ந்து அனைவரும் ஒற்றுமையாக இருந்து அ.தி.மு.க. அரசு மீண்டும் மலர உழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மாநில செயலாளர் கே.பி. ஆறுமுகம், மாநில பொருளாளர் கே.பி.நோவா, மாநில இளைஞர் அணி தலைவர் கே.எஸ்.நாகராஜ், மாநில மகளிர் அணி தலைவி சகாயம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்