கடலூரில், ஓட்டலுக்கு சீல் வைப்பு

கடலூரில், ஓட்டலுக்கு சீல் வைக்கப்பட்டது.

Update: 2021-02-24 19:56 GMT
கடலூர், 

கடலூர் பஸ் நிலையத்தில் நகராட்சிக்கு சொந்தமாக சுமார் 150-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு நகராட்சி மூலம் வாடகை நிர்ணயம் செய்யப்பட்டு, வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பஸ் நிலையத்தில் உள்ள பிரபல ஓட்டலில் கடந்த 3 ஆண்டுகளுக்கான வாடகை தொகை ரூ.1 கோடியே 52 லட்சம் செலுத்தவில்லை என தெரிகிறது. இதனால் வாடகை பாக்கியை உடனே செலுத்தும்படி நகராட்சி அதிகாரிகள் பலமுறை கூறியும், ஓட்டல் உரிமையாளர் வாடகை பாக்கி செலுத்தவில்லை என கூறப்படுகிறது.
இதனால் நகராட்சி கமிஷனர் ராமமூர்த்தி உத்தரவின் பேரில் வருவாய் அலுவலர் வெங்கடேசன், வருவாய் ஆய்வாளர்கள் பாஸ்கரன், அசோகன், வருவாய் ஆய்வாளர் மற்றும் சந்தை கண்காணிப்பாளர் (பொறுப்பு) சக்திவேல் மற்றும் வருவாய் உதவியாளர்கள் நேற்று மதியம் அந்த ஓட்டலுக்கு சீல் வைப்பதற்காக சென்றனர்.
அந்த ஓட்டலுக்கு இருபுறமும் நுழைவு வாயில் உள்ளதால், நகராட்சி அதிகாரிகள் ரெயில்வே சுரங்கப்பாதை அருகில் உள்ள நுழைவு வாயில் ஷட்டரை பூட்டி, ஓட்டலுக்கு சீல் வைத்தனர். பின்னர் பஸ் நிலையம் வழியாக ஓட்டலுக்கு செல்லக்கூடிய கதவை பூட்டி சீல் வைக்க அதிகாரிகள் சென்றனர். அப்போது அங்கிருந்த கடை ஊழியர்கள் மற்றும் வியாபாரிகள், சீல் வைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அவர்கள், நாளைக்குள் (அதாவது இன்று) வாடகை பாக்கி செலுத்தி விடுவதாகவும், அதுவரை சீல் வைக்க வேண்டாம் எனவும், ஏற்கனவே வைத்த சீலை அகற்றும்படியும் கூறினர். அதற்கு அதிகாரிகள், ஏற்கனவே வைக்கப்பட்ட சீலை அகற்ற முடியாது என்று கூறி, பஸ் நிலையம் வழியாக ஓட்டலுக்கு செல்லக்கூடிய பகுதியில் மட்டும் சீல் வைக்காமல் சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்