வேலைவாய்ப்பில் 4 சதவீதம் இடஒதுக்கீடு கேட்டு குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 12 பேர் கைது

வேலை வாய்ப்பில் 4 சதவீதம் இட ஒதுக்கீடு கேட்டு குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 12 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-02-26 14:55 GMT
திருவாரூர், 

அரசு வேலை வாய்ப்புகளில் 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். கடும் ஊனமுற்றவர்களுக்கு மாத உதவித்தொகை ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்.

தனியார் துறையில் வேலைவாய்ப்புக்கு 5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். தெலுங்கானா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களை போல தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையாக குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கடந்த 23-ந் தேதி குடியேறும் போராட்டத்தை தொடங்கினர்.

12 பேர் கைது

நேற்று 3-வது நாளாக திருவாரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில் போராட்டம் நடந்தது.

போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சந்திரா தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, கெரகோரியா, சோமு, ரேவதி உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த போராட்டம் காரணமாக திருவாரூர்-தஞ்சை சாலையில் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து திருவாரூர் தாலுகா போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 12 பேரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்