நன்னிலம் அருகே தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: தேர்வானவர்களுக்கு பணிநியமன ஆணை

நன்னிலம் அருகே தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. இதில் தேர்வானவர்களுக்கு கலெக்டர் சாந்தா, வேலைவாய்ப்பு-பயிற்சித்துறை இயக்குனர் வீரராகவராவ் ஆகியோர் பணிநினமன ஆணைகளை வழங்கினர்.

Update: 2021-02-26 15:06 GMT
நன்னிலம், 

திருவாரூர் அருகே சொரக்குடியில் உள்ள ஆரூரான் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் திருவாரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை மாவட்ட கலெக்டர் சாந்தா, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இயக்குனர் வீரராகவராவ் ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் பேசியதாவது:-

வாழ்க்கைத்தரம் உயர...

தமிழக மக்களின் வாழ்க்கைதரம் உயர்வதற்காக அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில், படித்து வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கத்துடன் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் இளைஞர்களுக்கு பல்வேறு பயிற்சி திட்ட முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளும் இலவசமாக நடத்தப்பட்டு வருகிறது. மேலும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகையும் அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

பணிநியமன ஆணை

பின்னர் மாவட்ட கலெக்டர் கூறுகையில், ‘வேலைவாய்ப்பு முகாமில் பல்வேறு நிறுவனங்களை கலந்து கொள்ள செய்து, இளைஞர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டது. 8-ம் வகுப்பு முதல் என்ஜினீயரிங் பட்டதாரிகள் வரை வேலை வாய்ப்பு வழங்கி, பணிநியமன ஆணைகளையும் வழங்கி உள்ளோம்.

மேலும், உயர்கல்வி, சுயவேலைவாய்ப்பு மற்றும் வங்கி கடன் தொடர்பான ஆலோசனைகளும் இளைஞர்களுக்கு வழங்கப்பட்டது’ என்றார்.

நிகழ்ச்சியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மண்டல இணை இயக்குனர் சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சந்திரசேகரன், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஆசைமணி, மாவட்ட வேளாண் விற்பனை குழுத்தலைவர் கோபால், ஒன்றியக்குழு தலைவர்கள் விஜயலெட்சுமி குணசேகரன், கிளாரா செந்தில், கூட்டுறவு சங்க தலைவர் ராமகுணசேகரன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் சி.பி.ஜி.அன்பழகன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் பாப்பா சுப்பிரமணியன், பன்னீர்செல்வம், முன்னாள் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் பொன்வாசுகிராம், கமலாம்பிகா கூட்டுறவு வங்கித்தலைவர் ஆர்.டி.மூர்த்தி, மாங்குடி கூட்டுறவு வங்கித்தலைவர் மணிகண்டன், சொரக்குடி ஊராட்சி மன்ற தலைவர் சுவாமிநாதன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்