திருவண்ணாமலையில் 11 மாதங்களுக்கு பிறகு நடந்த விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் 11 மாதங்களுக்கு பிறகு விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடந்தது.

Update: 2021-02-26 18:39 GMT
திருவண்ணாமலை
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் 11 மாதங்களுக்கு பிறகு விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடந்தது.

கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் சுமார் 11 மாதங்களுக்கு பிறகு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முருகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் ராஜ் குமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் காமாட்சி உள்பட அரசு அலுவலர்கள் மற்றும் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:- 

மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத் தொழிலாளர்களுக்கு வேலைக்கான அட்டை வழங்க வேண்டும். விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்த கரும்புக்கான தொகை ரூ.26 கோடி மற்றும் 5 ஆண்டுகளாக நிலுவைத் தொகையை போளூரில் உள்ள தனியார் சர்க்கரை ஆலை வழங்கவில்லை. எனவே பேரிடராக அறிவித்து விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை வழங்க வேண்டிய சர்க்கரை ஆலைகளை கையகப்படுத்தி விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பாக்கி தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும். 

கண்ணமங்கலம் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். குடிமராமத்து பணியில் முறைகேடு நடைபெற்றுள்ளது. கீழ்பென்னாத்தூர் உட்பட மாவட்டம் முழுவதும் ஏரியை அளவீடு செய்து கல் பதிக்காமல் தூர் வாரப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை- விழுப்புரம் சாலையில் உள்ள வேட்டவலத்தில் ஆக்கிரமிப்புகள் அதிகளவில் உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ஏரி, குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

மேலும் செய்திகள்