சோழவந்தான் அருகே அய்யப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு விழா

சோழவந்தான் அருகே அய்யப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு விழா நடந்தது

Update: 2021-02-26 20:52 GMT
சோழவந்தான்
சோழவந்தான் அருகே அய்யப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு விழா நடந்தது. 
 ஜல்லிக்கட்டு விழா
சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட அய்யப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் தொன்றுதொட்டு ஜல்லிக்கட்டு விழா நடந்து வந்தது. இடையில் நிறுத்தப்பட்ட ஜல்லிக்கட்டு விழா மீண்டும் தொடங்கியது. கொரோனா தொற்று காரணமாக  ஊரடங்கு உத்தரவு இருந்ததால் கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு விழா நிறுத்தப்பட்டது. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு விழா நடத்துவதற்கு அரசு அனுமதி வழங்கியது. இதைெதாடர்ந்து பெத்தண்ணசாமி சாமி கோவில் மாசித் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு விழா நேற்று நடந்தது. இதையொட்டி பெத்தண்ணசாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர் அங்கிருந்து சாமியாடிகள், பூசாரிகள், விழா கமிட்டியினர் காளைகளை மேளதாளத்துடன் ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு அழைத்து வந்தனர். இதில் 516 காளைகள், 179 வீரர்கள் பங்கேற்றனர். 
37 பேர் காயம்
மதுரை கோட்டாட்சியர் முருகானந்தம் கொடியசைத்து ஜல்லிக்கட்டு விழாவை தொடங்கி வைத்தார். வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட காளைகள் சீறிப் பாய்ந்தன. காளைகளை அடக்க மாடுபிடி வீரர்கள் மல்லுக்கட்டினர். காளைகள் முட்டியதில் 37 பேர் காயம் அடைந்தனர். சோழவந்தானை சேர்ந்த மருது(வயது 32), மாடக்குளத்தைச் சேர்ந்த வெங்கடேசன்(33), காளிதாஸ் அரசு ஆஸ்பத்திரியில் அனுப்பி வைக்கப்பட்டனர். வாடிப்பட்டி தாசில்தார் பழனிகுமார், வருவாய் அலுவலர் அழகுகுமார், வட்டார மருத்துவஅலுவலர் மனோஜ்பாண்டியன், சுகாதாரஆய்வாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர். சோழவந்தான் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்