நாகை புதிய கடற்கரையில் மாசிமக தீர்த்தவாரி உற்சவம்

நாகை புதிய கடற்கரையில் மாசிமக தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கடலில் புனித நீராடினர்.

Update: 2021-02-27 16:10 GMT
நாகப்பட்டினம்:
நாகை புதிய கடற்கரையில் மாசிமக தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கடலில் புனித நீராடினர்.
மாசிமக தீர்த்தவாரி
ஆண்டு தோறும் மாசி மகத்தையொட்டி நாகை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன்-பெருமாள் கோவில்களில் இருந்து சாமிகள் பல்வேறு வாகனங்களில் புறப்பாடாகி நாகை புதிய கடற்கரையில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு மாசிமகத்தையொட்டி தீர்த்தவாரி உற்சவம் நேற்று நாகை புதிய கடற்கரையில் நடைபெற்றது. முன்னதாக நாகை நீலாயதாட்சியம்மன் கோவில், சவுந்தரராஜ பெருமாள் கோவில், பாப்பாக்கோவில் கஸ்தூரி ரங்கநாத பெருமாள் கோவில், வெளிப்பாளையம் வரதராஜ பெருமாள் கோவில்,  அகஸ்தீஸ்வரர் கோவில், நாகை சட்டையப்பர் கோவில், மெய்க்கண்ட மூர்த்தி கோவில், நடுவதீஸ்வரர் கோவில், கிருஷ்ணன் கோவில், ஸ்ரீதாய் மூகாம்பிகை கோவில், அந்தணப்பேட்டை நித்தியகல்யாண பெருமாள் கோவில்களில் இருந்து சாமிகள் நாகை புதிய கடற்கரையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
புனித நீராடல்
அதைதொடர்ந்து கடற்கரையில் சாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் ஒவ்வொரு கோவில்களில் இருந்து  கொண்டு வரப்பட்ட அஸ்திரதேவருக்கு கடலில் வைத்து அபிஷேக, ஆராதனை நடைபெற்றன. இதில் இந்து அறநிலைய துறை இணை ஆணையர் தென்னரசு, உதவி ஆணையர் ராணி, செயல் அலுவலர் பூமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். 
தீர்த்தவாரியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக நாகை நம்பியார்நகர் மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் சாமிகளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினர்.

மேலும் செய்திகள்