எம்.எல்.ஏ. அலுவலகங்களுக்கு ‘சீல்’ வைப்பு

தேர்தல் நடத்தை விதிமுறை அமல்படுத்தப்பட்டதால் எம்.எல்.ஏ. அலுவலகங்களுக்கு சீல்’ வைக்கப்பட்டது. அரசியல் கட்சிகளின் சுவரொட்டி- பேனர்கள் அகற்றப்பட்டன.

Update: 2021-02-27 16:27 GMT
நாகப்பட்டினம்:
தேர்தல் நடத்தை விதிமுறை அமல்படுத்தப்பட்டதால் எம்.எல்.ஏ. அலுவலகங்களுக்கு சீல்’ வைக்கப்பட்டது. அரசியல் கட்சிகளின் சுவரொட்டி- பேனர்கள் அகற்றப்பட்டன.
எம்.எல்.ஏ. அலுவலகங்களுக்கு ‘சீல்’
தமிழகம் புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தில் வரும் மார்ச் 12-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. தொடர்ந்து வரும் ஏப்ரல் மாதம் 6-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மே 2-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. தேர்தல் அறிவிப்பு வந்ததும் நேற்று முன்தினம் நள்ளிரவு முதலே தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்தது. இதையடுத்து மாநிலத்தில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகங்கள் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டன. அதேபோல ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் பயன்படுத்திய அரசு வாகனங்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர்களின் அரசு வாகனங்கள் உள்ளிட்டவை அரசு அலுவலகத்தில் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டன.
இதன் ஒரு பகுதியாக நாகை தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகம் நேற்று முன்தினம் இரவு பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது. இதேபோல வேதாரண்யம் தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகம், கீழ்வேளூர் தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகம் ஆகியவை பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது.
சுவரொட்டிகள்- பேனர்கள் அகற்றம் 
மேலும் நாகை புதிய, பழைய பஸ் நிலையங்கள், பப்ளிக் ஆபீஸ் ரோடு, நாகூர் மெயின் ரோடு உள்ளிட்ட முக்கிய நகரப்பகுதிகளில் அரசியல் கட்சி தலைவர்களின் புகைப்படங்களுடன் வைக்கப்பட்ட விளம்பர பேனர்கள், சுவர் விளம்பரங்கள் உள்ளிட்டவை அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் கட்சி கொடிகளை அகற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சில அரசியல் கட்சி தலைவர்கள் தாங்களாகவே முன்வந்து பேனர்களை அப்புறப்படுத்தினர். அதேபோல அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகளும் போலீஸ் பாதுகாப்புடன் மூடப்பட்டது.

மேலும் செய்திகள்