எலக்ட்ரிக்கல் கடையில் பணம் திருடியவர் கைது

எலக்ட்ரிக்கல் கடையில் பணம் திருடியவர் கைது

Update: 2021-02-27 17:36 GMT
பெரம்பலூர்
பெரம்பலூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 42). இவர் பெரம்பலூர்- அரியலூர் சாலையில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்து கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். மறுநாள் அதிகாலையில் ஆறுமுகம் வந்து பார்த்த போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதையடுத்து அவர் உள்ளே சென்று பார்த்த போது கல்லாவில் இருந்த ரூ.9,500 திருட்டு போயிருந்தது.
மேலும் அருகே உள்ள நொச்சியம் கிராமத்தை சேர்ந்த தனசேகரின் (50) டீக்கடையின் பூட்டும் உடைக்கப்பட்டிருந்தது. ஆனால் அதில் இருந்து பொருட்கள் சிதறி கிடந்ததே தவிர, கடையில் இருந்த ரூ.20 ஆயிரம் திருடு போகவில்லை. இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் எலக்ட்ரிக்கல் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் பார்வையிட்டனர்.
அதில் திருட்டில் ஈடுபடும் மர்மநபரின் காட்சி பதிவாகியிருந்தது. இதையடுத்து அந்த நபரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை அந்த நபர் செங்குணம்-கைகாட்டி சாலையில் நின்று கொண்டிருந்தார். அந்த நபரை பிடித்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் கல்பாடி தெற்கு தெருவை சேர்ந்த முத்துசாமி (50) என்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துசாமியை கைது செய்து, பணத்தை பறிமுதல் செய்தனர். முத்துசாமி மீது ஏற்கனவே பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எலக்ட்ரிக்கல் கடையில் இரவில் பணம் திருடியவரை காலையிலேயே பிடித்து கைது செய்த போலீசாரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

மேலும் செய்திகள்