கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் சாலை மறியல்

நேர்காணல் திடீரென்று ரத்தானதால் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் சாலை மறியல் செய்தனர்.

Update: 2021-02-27 23:21 GMT
கோவை,

கோவை மாவட்டத்தில் காலியாக உள்ள 49 கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு கோவை டாடாபாத் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளியில் நேற்று நேர்காணல் நடைபெறும் என்று கால்நடை துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

அதன்பேரில், அந்த பணிக்கு விண்ணப்பித்து இருந்தவர்கள், மாநகராட்சி பள்ளி முன் நேற்று காலை குவிந்தனர். 

இதனிடையே நேற்றுமுன்தினம் சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளி யிடப்பட்டது. இதன்காரணமாக மாநகராட்சி பள்ளிக்கூடத்தின் வாசலில் நேர்காணல் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக திடீரென்று அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருந்தது. அதை பார்த்ததும் விண்ணப்பதாரர் கள் அதிர்ச்சி அடைந்தனர். 

இது பற்றி அவர்கள் விசாரித்த போது இனி தேர்தல் முடிந்த பிறகு தான் நேர்காணல் நடத்தப்படும் என்று கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த விண்ணப்பதாரர்கள் திடீரென்று அந்த பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இதை அறிந்த போலீசார் மற்றும் கால்நடை துறை அதிகாரிகள் விரைந்து சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அப்போது விண்ணப் பதாரர்கள் தரப்பில், கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடத் திற்கான நேர்க்காணல் 3 முறை ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால் தங்களுக்கு வயது வரம்பு முடிந்து, மீண்டும் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்படும். 

எனவே அடுத்த முறை நேர்க்காணலுக்கு அழைக்கும் போது தற்போது விண்ணப்பித்த அனைவரையும் அழைக்க வேண்டும் என்று தெரிவித்தனர். 
அவர்களிடம், உயர் அதிகாரிகளிடம் தெரிவிப்பதாக கால்நடைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.  அதை ஏற்று அவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்