போலீசாரை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

மானபங்கப்படுத்தப்பட்ட இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் போலீசாரை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-02-28 17:02 GMT
அரசூர், 

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஆனத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மகள் லேனா(வயது 25) பட்டதாரியான இவர், சிறுகிராமத்தில் இருந்து ஆனத்தூருக்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது சிறுகிராமத்தை சேர்ந்த மின் ஊழியரான கந்தசாமி(28) என்பவர், லேனாவை வழிமறித்து மானபங்கப்படுத்தி தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக லேனா, திருவெண்ணெய்நல்லூர் போலீசில் புகார் செய்தார்.
இது பற்றி அறிந்ததும் கந்தசாமி, அவரது தந்தை பாலகிருஷ்ணன், உறவினர் பிரபு என்கிற ராமச்சந்திரன், தொட்டிமேடு கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் ஆகிய 4 பேரும் சேர்ந்து லேனாவின் வீட்டிற்கு சென்று திட்டியதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த லேனா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக கந்தசாமி உள்பட 4 பேர் மீது திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சாலை மறியல் 

இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணிக்கு லேனாவின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் ஒன்று திரண்டு அரசூர்-பண்ருட்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் திருவெண்ணெய்நல்லூர் இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். 
அப்போது கிராம மக்கள், மானபங்கப்படுத்தியது தொடர்பாக லேனா கொடுத்த புகாரின் பேரில் உடனடியாக விசாரித்து குற்றவாளிகளை கைது செய்திருந்தால் லேனா தற்கொலை செய்திருக்க மாட்டார். லேனாவின் தற்கொலைக்கு கந்தசாமி உள்பட 4 பேரும், புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத போலீசாருமே காரணம். எனவே குற்றவாளிகள் 4 பேரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும், புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்காத போலீசார் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

போக்குவரத்து பாதிப்பு 

மேலும் தற்கொலைக்கு முன்பு லேனா எழுதி வைத்திருந்த கடிதத்தை காண்பித்து போலீசாருடன் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த சமயத்தில் 2 பெண்கள் மயங்கி விழுந்தனர். உடனடியாக அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. 
இவர்களது போராட்டம் 3 மணி வரை நீடித்தது. இதனால் விழுப்புரத்தில் இருந்து துணை போலீஸ் சூப்பிரண்டுகள் நல்லசிவம், வசந்தராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து, கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 
அப்போது போலீசார், 4 பேரையும் உடனடியாக கைது செய்வதாகவும், புகாரின்படி நடவடிக்கை எடுக்காத போலீசார் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தனர். இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அரசூர்-பண்ருட்டி சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்