சூலூர், சுல்தான்பேட்டை உள்பட 25 இடங்களில் வீட்டின் பூட்டை உடைத்து கைவரிசைகாட்டியவர் கைது

சூலூர், சுல்தான்பேட்டை உள்பட 25 இடங்களில் வீட்டின் பூட்டை உடைத்து கைவரிசைகாட்டியவர் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது.

Update: 2021-02-28 18:59 GMT
சுல்தான்பேட்டை,

கோவை மாவட்டம் சூலூர் அருகே காங்கேயம்பாளையத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சிவபாலன் என்பவரின் வீட்டில் பூட்டை உடைத்து நகை, பணம் திருடப்பட்டது.  தொடர்ந்து சுல்தான்பேட்டை ஒன்றியம் வதம்பச்சேரி, ஜல்லிபட்டி ஆகிய பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் திருடப்பட்டது. இந்த தொடர் திருட்டால் பொதுமக்கள் கடும் அச்சம் அடைந்தனர்.

இந்த திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை கைது செய்ய மேற்கு மண்டல ஐ.ஜி. தினகரன், கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு ஆகியோர் உத்தரவின்பேரில், கருமத்தம்பட்டி துணைபோலீஸ் சூப்பிரண்டு சூரியமூர்த்தி,  சூலூர் இன்ஸ்பெக்டர் முருகேசன், சுல்தான்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் உள்ளிட்டோர் அடங்கிய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்த நிலையில் நேற்று தனிப்படையினர் சுல்தான்பேட்டை அருகே வாரப்பட்டி பிரிவில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த ஒருவர் போலீசாரை கண்டதும், வேகமாக ஓடினார். இதனால், சந்தேகமடைந்த போலீசார் அந்த நபரை விரட்டி பிடித்து விசாரித்தனர். விசாரணையில், தேனி மாவட்டம் அல்லிநகரத்தை அடுத்த வெங்கலா நகரை சேர்ந்த பொன்ராஜ் (வயது 44) என்பதும், 

சூலூர், வதம்பசேரி, ஜல்லிப்பட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடியதும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் இருந்து 13½ பவுன் தங்க நகையை பறிமுதல் செய்தனர்.

கைதான பொன்ராஜ் சிவகாசி, திண்டுக்கல், புதுக்கோட்டை, அம்பிலிக்கை, கள்ளிமந்தயம், கொடைக்கானல், தாராபுரம், காங்கயம், சூலூர் உள்பட 25 இடங்களில் வீட்டின் பூட்டை உடைத்து கைவரிசை காட்டியுள்ளார். இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் சுமார் 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன என்பது விசாரணையில் தெரியவந்தது.

மேலும் செய்திகள்