கடலூர் மாவட்ட எல்லைகளில் மது கடத்தலை தடுக்க கூடுதல் சோதனைச்சாவடிகள் கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி உத்தரவு

மது கடத்தலை தடுக்க கூடுதல் சோதனைச்சாவடிகள்

Update: 2021-02-28 21:10 GMT
கடலூர், 

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி மாவட்ட மற்றும் மாநில எல்லைகளில் சோதனைச்சாவடிகள் அமைத்து மதுபான கடத்தலை தடுப்பதற்கான துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆயத்த பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கடலூர் மாவட்ட மற்றும் மாநில எல்லைகளில் நிரந்தர சோதனைச்சாவடிகளாக ஆல்பேட்டை, அழகியநத்தம், மேல்பட்டாம்பாக்கம், கண்டரக்கோட்டை மற்றும் தற்காலிக சோதனைச்சாவடிகளாக கும்தாமேடு, வெளிச்செம்மண்டலம், சாவடி, அழகிய நத்தம் தரைப்பாலம், வான்பாக்கம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது சட்டமன்ற தேர்தலையொட்டி புதிதாக கூடுதல் சோதனைச்சாவடிகள் தேவைக்கேற்ப அமைத்து, மது கடத்தலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து சோதனைச்சாவடிகளிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். வடிப்பகத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு வரும் ஆல்ஹகால் மற்றும் எத்தனால் எடுத்து வரும் வாகனங்களை முறையான அனுமதி பெற்றுள்ளதா என்று சோதனை செய்ய வேண்டும். 30 சதவீதத்திற்கு மேல் விற்பனை செய்யப்படும் சில்லரை விற்பனை கடைகளை கண்காணித்து புள்ளி விவரங்களை அனுப்ப வேண்டும். இவ்வாறு கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி கூறினார்.கூட்டத்தில் கடலூர் கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், கலால் உதவி ஆணையர் லூர்துசாமி, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ஸ்ரீதரன் (கலால்), சாந்தி, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ரவிக்குமார், தேர்தல் தாசில்தார் பாலமுருகன் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்