இனாம் சமயபுரம் ஆதிமாரியம்மன் கோவில் தேரோட்டம்

இனாம் சமயபுரம் ஆதிமாரியம்மன் கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Update: 2021-02-28 21:53 GMT
சமயபுரம், 

இனாம் சமயபுரம் ஆதிமாரியம்மன் கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

ஆதிமாரியம்மன்

சமயபுரம் மாரியம்மன் கோவிலின் முதன்மையான கோவிலாக விளங்குவது இனாம்சமயபுரத்தில் உள்ள ஆதிமாரியம்மன்கோவில் ஆகும். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு தேரோட்டம் நேற்று நடைபெற்றது.

இதையொட்டி கடந்த 22-ந்தேதி முதல் தினமும் ஆதிமாரியம்மன் சிம்மவாகனம், யானை வாகனம், ரிஷபவாகனம், அன்னவாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று முன்தினம் குதிரைவாகனத்தில் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

தேரோட்டம்

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி காலை 9.40 மணிக்கு அம்மன் தேரில் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து வாணவெடிகள் வெடிக்க, மேளதாளங்கள் முழங்க 9.45 மணிக்கு பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தேருக்கு முன்பாக பக்தர்கள் அலகுகுத்தியும், அக்னிசட்டி ஏந்தியும் வந்தனர். இதில், இனாம்சமயபுரம், மருதூர், மாகாளிகுடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச்சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேர்தேரோடும் வீதிவழியாக வலம்வந்து 10.41 மணிக்கு நிலையை அடைந்தது.

அன்னதானம்

விழாவையொட்டி பல்வேறு அமைப்புகளின் சார்பாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளை சமயபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையில் போலீசார் மேற்கொண்டனர். 

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோவில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.
இனாம் சமயபுரம் ஆதிமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்ற போது எடுத்தபடம். (உள்படம்: சிறப்பு அலங்காரத்தில் ஆதிமாரியம்மன்).

மேலும் செய்திகள்