விநாயகர் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை; மர்ம நபர்களுக்கு போலீசார் வலை வீச்சு

துறையூரை அடுத்த செல்லி பாளையத்தில் விநாயகர் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளை அடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2021-02-28 21:53 GMT
துறையூர், மார்ச்.1-
துறையூரை அடுத்த செல்லி பாளையத்தில் விநாயகர் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளை அடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

விநாயகர் கோவிலில் கொள்ளை

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்து உள்ளது செல்லிபாளையம் கிராமம். இந்த கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊரின் மைய பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலின் உண்டியலை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அதே ஊரில் உள்ள விநாயகர் கோவில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். மேலும் வாயலில் விற்பனைக்கு கொண்டு செல்வதற்காக விவசாயிகள் வைத்திருந்த வெங்காய மூட்டைகளையும் அவர்கள் திருடி சென்றனர்.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

இதுபற்றி தகவல் அறிந்த துறையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு, அங்கு பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகள், தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

இதுகுறித்து செல்லிபாளையம் ஊராட்சி தலைவர் அரவிந்தன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இச்சம்பவம் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதால் இதற்கு உரிய தீர்வு காண வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்