60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி

சிவகங்கை மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அரசு மருத்துவமனைகளில் இலவசமாக இந்த ஊசி போடப்படும் என்று கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.

Update: 2021-03-02 18:39 GMT
சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அரசு மருத்துவமனைகளில் இலவசமாக இந்த ஊசி போடப்படும் என்று கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கலெக்டர் மதுசூதன் ரெட்டி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-

கொரோனா தடுப்பூசி

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றுக்கு எதிராக பொது சுகாதாரத்துறையின் மூலம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக மருத்துவப் பணியாளர்கள் மற்றும் முன் களப்பணியாளர்களுக்கு இந்த ஊசி போடப்பட்டது. தற்போது இரண்டாம் கட்டமாக நேற்றுமுன்தினம் முதல் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் சர்க்கரை, இருதய நோய் மற்றும் வேறு இணை நோய் உள்ள 45 வயது முதல் 59 வயது வரை உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட உள்ளது.
இந்த தடுப்பூசி சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, காரைக்குடி, மானாமதுரை, தேவகோட்டை, திருப்பத்தூர் ஆகிய இடங்களில் உள்ள தாலுகா அரசு மருத்துவமனைகளிலும், முத்தனேந்தல், மறவமங்களம், திருவேகம்பத்து, சாலைக்கிராமம், திருக்கோஷ்டியூர், செம்பனூர், பிரான்மலை, புதூர், ஆகிய இடங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும்.

பதிவு செய்வது எப்படி?

இதுதவிர பதிவு செய்த தனியார் மருத்துவமனைகளான காரைக்குடியில் அப்பல்லோ, தேவகி, காவேரி, பத்மினி மற்றும் ஜே.எஸ். மருத்துவமனையிலும், தேவகோட்டையில் செந்தில், அன்பு ராமச்சந்திரன், எஸ்.எம். மருத்துவமனையிலும், சிவகங்கையில் கார்த்திக் மருத்துவமனையிலும், சிங்கம்புணரியில் ஆர்.எம்.எஸ். புஸ்லி அம்மாள் மருத்துவமனையிலும் மொத்தம் 13 தனியார் மருத்துவமனைகளில் இந்த தடுப்பூசி போடப்படும். இந்த தடுப்பூசிக்கு அரசு மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்த தேவையில்லை. தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசிக்காக ரூ.250 கட்டணம் செலுத்த வேண்டும்.
முதியவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் தாங்களாகவே இந்த தடுப்பூசி போடுவதற்கு “Cowin” என்ற செயலி மூலம் பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்ய முடியாதவர்கள் தடுப்பூசி மையத்திற்கு நேரடியாக சென்று பதிவு செய்து கொள்ளலாம். தடுப்பூசி போட வரும்போது தேவையான ஆவணங்களான ஆதார்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். இந்த அரியவாய்ப்பினை முதியவர்களும், இணை நோய் உள்ளவர்களும் பயன்படுத்தி தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்