பயணிகளின் கண் முன்னே கல்லால் அடித்து சுமை தூக்கும் தொழிலாளி கொடூரமாக கொலை; சென்டிரல் ரெயில் நிலையத்தில் பரபரப்பு சம்பவம்

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் பயணிகளின் கண் முன்னே சுமை தூக்கும் தொழிலாளி, கல்லால் அடித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

Update: 2021-03-04 01:03 GMT
சுமை தூங்கும் தொழிலாளி
வேலூர் மாவட்டம் கோடியூர் பகுதியை சேர்ந்தவர் பூங்காவனம் என்ற ராஜா (வயது 41). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 பிள்ளைகள் உள்ளனர். பூங்காவனம் சென்னையில் தங்கியிருந்து சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல் ரெயில் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

இவர், சென்டிரல் ரெயில் நிலையத்தில் தங்கியிருந்து, 3 மாதத்துக்கு ஒரு முறை வேலூரில் வசித்து வரும் தனது மனைவி, பிள்ளைகளை பார்த்து விட்டு வருவது வழக்கம். மேலும் அவருடன் வேலை செய்யும் பலரும் சென்டிரல் ரெயில் நிலையத்தில் தங்கியிருந்து சுமை தூக்கும் வேலை செய்து வருகின்றனர். கடந்த 1-ந்தேதி சுமை தூக்குவது தொடர்பாக பூங்காவனத்துக்கும், அவருடன் வேலை செய்யும் சக தொழிலாளி குமார் என்ற அழுக்கு குமாருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

கல்லால் அடித்தார்
இதனை கண்ட சக தொழிலாளிகள் இருவரையும் சமாதானம் செய்து வைத்தனர். பின்னர் நேற்று முன்தினம் பூங்காவனம் சென்டிரல் ரெயில் நிலையத்தில் பயணிகள் காத்திருக்கும் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் உட்கார்ந்திருந்த இடத்தில் தரையில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார்.அப்போது அங்கு வேகமாக வந்த குமார், யாரும் எதிர்பார்க்காத வகையில் பயணிகளின் கண் முன்னே, திடீரென தான் கையில் கொண்டு வந்த கல்லால், தூங்கிக்கொண்டிருந்த பூங்காவனத்தின் தலையில் ஓங்கி அடித்து விட்டு தப்பி ஓடிவிட்டார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள் செய்வதறியாது, திகைத்து நின்றனர்.

உயிரிழந்தார்
இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த சென்டிரல் ரெயில் நிலைய போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பூங்காவனத்தை மீட்டு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பூங்காவனத்தை கல்லால் அடித்துக்கொலை செய்து விட்டு தப்பி ஓடிய குமாரை, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமரா உதவியுடன் வலை வீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்