ஓய்வுபெற்ற அரசு அதிகாரி மனைவியிடம் தாலிச்சங்கலி பறித்தவர் கைது

பெரம்பலூரில் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி மனைவியிடம் தாலிச்சங்கிலியை பறித்து சென்றவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-03-04 18:59 GMT
பெரியசாமி
பெரம்பலூர்:

தாலிச்சங்கிலி பறிப்பு
பெரம்பலூர் கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள மேற்கு அபிராமபுரத்தை சேர்ந்தவர் பெரியசாமி. இவர், வேளாண்மை துறையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவருடைய மனைவி ஜெயலட்சுமி(வயது 57). கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் 29-ந் தேதியன்று இரவு பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா அருகே உள்ள சூப்பர் மார்க்கெட்டில் இருந்து ெஜயலட்சுமி ஸ்கூட்டரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர், ஜெயலட்சுமியின் கழுத்தில் கிடந்த 6 பவுன் தாலிச்சங்கிலியை பறித்து சென்றார். இது குறித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் பெரம்பலூரில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் மர்மநபர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் உத்தரவின்பேரில், பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு சரவணன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மனோஜ், போலீஸ்காரர்கள் ஆறுமுகம், லட்சுமணன் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நேற்று பெரம்பலூரில் ரோந்து சென்றபோது, சந்தேகப்படும்படியாக சுற்றி திரிந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
கைது
விசாரணையில், அவர் சேலம் மாவட்டம், ஆத்தூர் தாலுகா, கல்பகனூர் அருகே உள்ள பள்ளக்காடு கிராமத்தை சேர்ந்த சிவபெருமாள் மகன் இடையன் என்ற பெரியசாமி (35) என்பது தெரியவந்தது. மேலும் ஜெயலட்சுமியிடம் தாலிச்சங்கிலியை பறித்து சென்றது அவர்தான் என்பதும், விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். பெரியசாமி மீது சேலம் போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து பெரியசாமியை கைது செய்த போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்