தேர்தல் பணியில் ஈடுபடும் தாம்பரம் நகராட்சி ஊழியர்கள் 714 பேருக்கு கொரோனா தடுப்பூசி

தேர்தல் ஆணையம் உத்தரவின்படி தேர்தல் பணியில் ஈடுபடும் தாம்பரம் நகராட்சியில் பணிபுரியும் ஊழியர்கள் 714 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடுவது குறித்து நகராட்சி கமிஷனர் சித்ரா தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

Update: 2021-03-05 05:05 GMT

தேர்தல் ஆணையம் உத்தரவின்படி தேர்தல் பணியில் ஈடுபடும் தாம்பரம் நகராட்சியில் பணிபுரியும் ஊழியர்கள் 714 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடுவது குறித்து நகராட்சி கமிஷனர் சித்ரா தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஊழியர்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

அதன்படி நேற்று மதியம் நகராட்சிக்கு உட்பட்ட ரங்கநாதபுரம், பட்டேல் நகர், பூண்டி பஜார் ஆகிய இடங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் முதல் கட்ட பணிகள் தொடங்கியது.

இதில் தாம்பரம் நகராட்சி கமிஷனர் சித்ரா, நகராட்சி என்ஜினீயர் கணேசன், சுகாதார அலுவலர் மொய்தீன் மற்றும் ஊழியர்கள் என 57 பேர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டதுடன், தடுப்பூசியும் போட்டுக்கொண்டனர்.

மீதமுள்ள 657 ஊழியர்களுக்கு இந்த வாரத்துக்குள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, தடுப்பூசி போடப்படும் எனவும், 2-ம் கட்ட தடுப்பூசி 28 நாட்களுக்கு பிறகு இந்த 714 பேருக்கும் இதே சுகாதார நிலையங்களில் போடப்படும் எனவும் நகராட்சி கமிஷனர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்