கிணற்றில் தவறி விழுந்த மான் உயிருடன் மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த மான் உயிருடன் மீட்கப்பட்டது.

Update: 2021-03-05 20:50 GMT
பாடாலூர்:
பெரம்பலூர் மாவட்ட வனப்பகுதிகளில் ஏராளமான மான்கள் உள்ளன. வனப்பகுதியில் இருந்து மான்கள் வழிதவறி ஊருக்குள் வருவது வழக்கம். இந்த நிலையில் குன்னம் தாலுகா சித்தளி வனப்பகுதியில் இருந்து நேற்று ஒரு மான் வழிதவறி தண்ணீர் தேடி அருகே உள்ள புளியரை என்ற இடத்திற்கு வந்தது. அப்போது அந்த மான் மருதபிள்ளை என்பவருக்கு சொந்தமான கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் தத்தளித்தவாறு உயிருக்கு போராடியது. இதனை கண்ட மருதபிள்ளை அருகில் இருந்தவர்களிடம் தெரிவித்தார். இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் (போக்குவரத்து) முருகன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சுமார் அரை மணி நேரம் போராடி கிணற்றில் வலை போட்டு மானை உயிருடன் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அந்த மான் 2 வயதுடைய ஆண் மான் என்பது தெரியவந்தது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் அந்த மானை சித்தளி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்