உரிய ஆவணங்கள் இல்லாததால் தேங்காய் வியாபாரியிடம் ரூ.2 லட்சம் பறிமுதல்

உரிய ஆவணங்கள் இல்லாததால் தேங்காய் வியாபாரியிடம் இருந்து ரூ.2 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-03-06 01:30 GMT
வாகன சோதனை

சட்டமன்ற தேர்தல் நேர்மையாகவும், அமைதியாகவும் நடைபெறுவதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை கண்காணிக்க பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழு உள்ளிட்டவை அமைக்கப்பட்டு உள்ளது. 

இந்த நிலையில் ஆனைமலை அருகே தமிழக-கேரள எல்லையான மீனாட்சிபுரத்தில் பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சதீஷ் தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி மற்றும் அலுவலர்கள், போலீசார் கொண்ட நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது வாகனத்தின் பெட்ரோல் டேங்க் கவரில் பணம் இருந்தது. 

இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பெரியபோதுவை சேர்ந்த தேங்காய் வியாபாரி ராமு என்பது தெரியவந்தது. மேலும் அவர் தோட்டத்தில் தேங்காய் வெட்டுவதற்கும், தொழிலாளர்களுக்கு கூலி கொடுக்கவும் ரூ.2 லட்சம் எடுத்து செல்வதும் தெரியவந்தது.

பணம் பறிமுதல்

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு செல்ல உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும். ஆனால் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால் அவரிடம் இருந்து ரூ.2 லட்சத்தை பறிமுதல் செய்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை ஆனைமலை தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி துரைசாமியிடம் நிலையான கண்காணிப்பு குழுவினர் வழங்கினர்.

 அப்போது உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி ராஜா, தேர்தல் பிரிவு தாசில்தார் முருகேசன், வருவாய் ஆய்வாளர் செல்லத்துரை ஆகியோர் உடன் இருந்தனர். இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது:-

ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்படுகிறது. பறிமுதல் செய்யப்படும் பணம் கருவூலத்தில் செலுத்தப்படும். 

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கு சம்பந்தப்பட்ட நபருக்கு ரசீது கொடுக்கப்படும். அதை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். இதற்கிடையில் கோவையில் மேல்முறையீட்டு கமிட்டி செயல்படுகிறது. 

அந்த கமிட்டியிடம் உரிய ஆவணங்களை காண்பித்து மேல்முறையீடு செய்ய வேண்டும். ஆவணங்கள் கொடுத்த பிறகு, அந்த கமிட்டியினர் கொடுக்கும் உத்தரவை தொடர்ந்து, கருவூலத்தில் செலுத்தப்பட்ட பணத்தை திரும்ப எடுத்து உரியவரிடம் கொடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்