தொழிலாளியை தாக்கிய செங்கல்சூளை உரிமையாளர் உள்பட 4 பேர் கைது

தொழிலாளியை தாக்கிய செங்கல்சூளை உரிமையாளர் உள்பட 4 பேர் கைது

Update: 2021-03-07 18:15 GMT
ஆவூர்
விராலிமலை தாலுகா, சித்தாம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 62). விவசாயியான இவர் சித்தாம்பூர் அருகே விராலிமலை-கீரனூர் சாலையோரத்தில் செங்கல்சூளை நடத்தி வருகிறார். இவரிடம் குன்னத்தூரை சேர்ந்த மூக்கன் (42) என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அப்போது மூக்கன், கணேசனிடம் வேலை பார்ப்பதற்காக முன்பணமாக ரூ. 10 ஆயிரம் பெற்று இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், மூக்கன் சரிவர வேலைக்கு வரவில்லை என்று தெரிகிறது. இதனால், மூக்கனை போன் மூலம் தொடர்பு கொண்ட கணேசன் அவரை செங்கல் சூளைக்கு வரவழைத்தார். அப்போது மூக்கனிடம், வேலைக்கு வரவில்லை என்றால் தான் கொடுத்த முன்பணத்தை திருப்பி தருமாறு கணேசன் கேட்டுள்ளார். அப்போது மூக்கன் தன்னிடம் தற்போது பணம் இல்லை என்று கூறியதாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த கணேசன் மற்றும் அவரது உறவினர்கள் மாத்தூரைச் சேர்ந்த சபரிநாதன் மகன் அருட்செல்வம் (24), ஜீவானந்தம் மகன் ஜெயசூர்யா (27), அவ்வையார்பட்டியை சேர்ந்த ராமநாதன் மகன் மோகன் (22) ஆகிய 4 பேரும் சேர்ந்து மூக்கனை கை மற்றும் கட்டையால் தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த மூக்கன் கீரனூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் மண்டையூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து செங்கல் சூளை உரிமையாளர் கணேசன் மற்றும் அருள்செல்வம், ஜெயசூர்யா, மோகன் ஆகிய 4 பேரையும் நேற்று முன்தினம் இரவு கைது செய்தார். பின்னர் அவர்கள் கீரனூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு அறந்தாங்கி சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்