லாட்டரி சீட்டு விற்ற வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Update: 2021-03-10 09:34 GMT
சேலம்:
சேலம் சீலநாயக்கன்பட்டி கே.ஆர்.நகர் பகுதியை சேர்ந்தவர் சதீஸ்குமார் (வயது 42). இவரை கடந்த மாதம் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற வழக்கில் அன்னதானப்பட்டி போலீசார் கைது செய்தனர். போலீசார் விசாரணையில், சதீஷ்குமார் மீது கடந்த 12 ஆண்டுகளில் மக்களை ஏமாற்றி லாட்டரி சீட்டுகளை விற்றதாக அன்னதானபட்டி போலீஸ் நிலையத்தில் மட்டும் 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதேபோல் கருப்பூர் கொல்லப்பட்டி புதூர் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (53). இவரை தடை செய்யப்பட்ட்ட லாட்டரி சீட்டு விற்றதாக கடந்த மாதம் கருப்பூர் போலீசார் கைது செய்தனர். சதீஸ்குமார் மற்றும் மாரியப்பன் ஆகியோர் இதுபோன்ற குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு பொதுமக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதால் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் துணை கமிஷனர் சந்திரசேகரன் மாநகர போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தார்.
இதை பரிசீலித்து சதீஸ்குமார், மாரியப்பன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் சந்தோஷ்குமார் உத்தரவிட்டார். இதில் சதீஸ்குமார் மீது 4-வது முறை குண்டர் சட்டம் பாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சேலம் மாநகரில் கடந்த 20 நாட்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், லாட்டரி சீட்டு விற்றவர்கள் மற்றும் கஞ்சா விற்றவர்கள் என 284 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்