சென்னை புறநகர் பகுதியில் வேட்பாளர்கள் மனு தாக்கல்

சென்னை புறநகர் பகுதியில் உள்ள காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களை உள்ளடக்கிய சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

Update: 2021-03-15 23:38 GMT

ஆலந்தூர்-தாம்பரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதன்படி ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளரான முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, தி.மு.க. வேட்பாளரான முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான தா.மோ.அன்பரசன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் உள்பட மொத்தம் 5 பேர் ஆலந்தூர் மண்டல அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி சாந்தியிடம் நேற்று மனு தாக்கல் செய்தனர்.

தாம்பரம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளரான முன்னாள் அமைச்சர் டி.கே.எம். சின்னையா, தி.மு.க. வேட்பாளரான தற்போதைய எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா, அ.ம.மு.க. வேட்பாளர் ம.கரிகாலன், மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் சிவ.இளங்கோ, நாம் தமிழர் கட்சி சார்பில் சுரேஷ்குமார் உள்பட 8 பேர் தாம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

பல்லாவரம்-ஆவடி

பல்லாவரம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளரான முன்னாள் எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன், தி.மு.க. சார்பில் போட்டியிடும் தற்போதைய எம்.எல்.ஏ. இ.கருணாநிதி, மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் செந்தில் ஆறுமுகம் உள்பட 6 பேர் தேர்தல் நடத்தும் அதிகாரி லலிதாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

பூந்தமல்லி (தனி) சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளரும், பூந்தமல்லி எம்.எல்.ஏ.வுமான கிருஷ்ணசாமி, பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சத்தியமூர்த்தி ஆகியோர் உள்பட 3 பேர் பூந்தமல்லி தாசில்தார் அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர் பிரீத்தி பார்கவியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

ஆவடி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் சா.மு.நாசர், நாம் தமிழர் கட்சி சார்பில் விஜயலட்சுமி, பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சார்லஸ், சுயேச்சை உள்ளிட்ட 8 பேர் ஆவடி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி பரமேஸ்வரியிடம் மனுதாக்கல் செய்தனர்.

அம்பத்தூர்

அம்பத்தூர் தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் வேதாச்சலம், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அன்பு தென்னரசன், 3 சுயேச்சை வேட்பாளர்கள் உள்பட 6 பேர் அம்பத்தூர் மண்டல அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி விஜயகுமாரியிடம் மனுதாக்கல் செய்தனர்.

மாதவரத்தில் அ.ம.மு.க. வேட்பாளர் தட்சணாமூர்த்தி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் உள்பட 3 பேர் மாதவரம் தாசில்தார் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஜோதியிடம் நேற்று மனுத்தாக்கல் செய்தனர்.

திருவொற்றியூர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் கே.குப்பன், மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் மோகன் மற்றும் சுயேச்சை வேட்பாளர் சந்திரசேகர் உள்ளிட்ட 6 பேர் திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி தேவேந்திரனிடம் மனுத்தாக்கல் செய்தனர்.

மதுரவாயல் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் அமைச்சர் பா.பென்ஜமின், தி.மு.க. வேட்பாளராக கணபதி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கணேஷ்குமார் உள்பட 5 பேர் நொளம்பூர் அலுவலகத்தில் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.

 

மேலும் செய்திகள்