திருவள்ளூர் மாவட்டத்தில் 10 பேர் வேட்பு மனு தாக்கல்

திருவள்ளூர் மாவட்டத்தில் 10 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

Update: 2021-03-17 06:54 GMT
கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் நேற்று கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில் தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலர் பாலகுருவிடம் அ.தி.மு.க. ஒன்றிய மகளிர் அணி செயலாளரான ஆர்.லட்சுமி (52) சுயேச்சை வேட்பாளராக தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

திருத்தணி சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி அகிலா, மாற்று கட்சி வேட்பாளர் உள்பட 2 பேர் மனு தாக்கல் செய்தனர்.

திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதியில் நேற்று அம்பேத்கர் மக்கள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் ரமேஷ்குமார், சுயேச்சை வேட்பாளர் பிரவீனா ஆகியோர் திருவொற்றியூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் தேவேந்திரனிடம் மனு தாக்கல் செய்தார்.

பூந்தமல்லி (தனி) சட்டமன்ற தொகுதியில் மை இந்தியா பார்டி சார்பில் பவுசியா காயத்ரி என்பவர் நேற்று பூந்தமல்லி தேர்தல் நடத்தும் அலுவலர் பிரீத்தி பார்கவியிடம் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதையடுத்து மதுரவாயல் சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் பத்மபிரியா நொளம்பூரில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர் இளங்கோவனிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கல் செய்யும்போது அதற்கான டெபாசிட் தொகை வைத்திருந்த பையை அவரது உதவியாளரிடம் கொடுத்து விட்டு மறந்தபடி வந்து விட்டார்.

பின்னர் வெளியே வந்து டெபாசிட் தொகை வைத்திருந்த பையை வாங்கி சென்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அம்பத்தூர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளர்கள் 3 பேர் மனு தாக்கல் செய்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று மட்டும் 10 பேர் மனு தாக்கல் செய்தனர்.

மேலும் செய்திகள்