குடிநீர் தொட்டி கட்ட எதிர்ப்பவர் மீது நடவடிக்கை கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பல்லடம் அருகே சித்தம்பலத்தில் குடிநீர் தொட்டி கட்ட எதிர்ப்பு தெரிவிக்கும் தனியாரை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-03-17 20:21 GMT
பல்லடம்
பல்லடம் அருகே சித்தம்பலத்தில் குடிநீர் தொட்டி கட்ட எதிர்ப்பு தெரிவிக்கும் தனியாரை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
வாக்குவாதம்
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
பல்லடம் அருகே சித்தம்பலம் ஊராட்சி பகுதியில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் பல்லடம்  உடுமலை சாலையில் உள்ள சித்தம்பலம் பிரிவில் குடிநீர் தொட்டி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 
இதன் அருகே உள்ள தனியார் வீட்டுமனை இடத்தின் உரிமையாளர் அங்காத்தாள் (வயது57) குடிநீர் தொட்டி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும், அடிக்கடி இடையூறு செய்து கட்டுமானப் பணிகளை நிறுத்திவைத்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று குடிநீர் தொட்டி அமைக்கும் பணியை பணியாளர்கள் ஈடுபட்டிருந்த போது அங்கு வந்த உரிமையாளர் அங்காத்தாள் தரப்பினர். தொழிலாளர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
இதனால் தொழிலாளர்கள் கட்டுமானப்பணிகளை நிறுத்தி விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவலறிந்து வந்த சித்தம்பலம் கிராமத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடிநீர் தொட்டி அமைக்கும் பணியை தடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பல்லடம்  உடுமலை சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அந்தப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த பல்லடம் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் திட்டப் பணிக்கு இடையூறு செய்து வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் காரணமாக பல்லடம்  உடுமலை சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்