100 சதவீதம் வாக்களிப்பு குறித்து நடமாடும் வாகனங்கள் மூலம் விழிப்புணர்வு - கலெக்டர் தொடங்கி வைத்தார்

100 சதவீதம் வாக்களிப்பு குறித்து நடமாடும் வாகனங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Update: 2021-03-18 17:59 GMT
திருவண்ணாமலை

தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. 

இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம் தயாரிக்கப்பட்டுள்ள 100 சதவீதம் வாக்களிப்போம், கட்டணமில்லா தொலைபேசி எண் 1950, c-VIGIL கைபேசி செயலி உள்பட தேர்தல் தொடர்பான அனைத்து தகவல்கள், விவரங்கள் அடங்கிய விழிப்புணர்வு குறும்படங்கள் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திரையிட்டு காட்டுவதற்கு 3 நடமாடும் எல்.இ.டி. வீடியோ வாகனங்களை கலெக்டர் சந்தீப்நந்தூரி கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

அதைத் ெதாடர்ந்து அவர், கலெக்டர் அலுவலக தரை தளத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். 

திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள், புகார்கள் மற்றும் விவரங்கள் தொடர்பாக பொதுமக்கள் 24 மணி நேரமும் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு ‘1950’ மற்றும் ‘1800-4255672’ ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும் c-VIGIL கைபேசி செயலி மூலம் அனுப்பப்படும் தேர்தல் தொடர்பான புகார்கள் குறித்து எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை குறித்து ஆய்வு செய்தார். 

தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் 24 மணி நேரமும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பான கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் பறக்கும் படை குழு வாகனங்கள் மற்றும் நிலை கண்காணிப்பு குழு வாகனங்கள், ஜி.பி.எஸ். கருவி மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதையும் ஆய்வு மேற்கொண்டார். 

அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமாரசாமி, கூட்டுறவு துறை துணைப் பதிவாளர் சரவணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) மற்றும் தேர்தல் பிரிவு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்