மக்கள் நலப்பணியாளர் பணியை பெற்று தருவதாக கூறி ரூ.25 லட்சம் மோசடி- முன்னாள் எம்.எல்.ஏ. மீது புகார்

மக்கள் நலப்பணியாளர் பணியை பெற்று தருவதாக கூறி ரூ.25 லட்சம் மோசடி செய்ததாக முன்னாள் எம்.எல்.ஏ. மீது புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2021-03-18 23:09 GMT
ஈரோடு
தமிழ்நாடு மக்கள் நலப்பணியாளர்கள் நலவாழ்வு கூட்ட அமைப்பின் பொதுச்செயலாளர் தெய்வசிகாமணி தலைமையில் 10-க்கும் மேற்பட்டோர், ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை    நேற்று கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-
மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குவதாக கூறி, கோபி பயணியர் விடுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவர் தலைமையில் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, மீண்டும் பணி ஆணை வழங்க ஒருவருக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் என கூறினார்கள். அதன்பேரில், மக்கள் நலப்பணியாளர்களாக பணியாற்றிய 50 பேர் மொத்தம் ரூ.25 லட்சம் வழங்கினோம். ஆனால் இதுவரை எங்களுக்கு பணியும் வழங்கவில்லை, நாங்கள் கொடுத்த பணத்தையும் திரும்ப கொடுக்கவில்லை. இதுபற்றி அந்த முன்னாள் எம்.எல்.ஏ.விடம் கேட்டதற்கு எங்களை தகாத வார்த்தையால் பேசி அவமானப்படுத்தி அனுப்பி விட்டார். இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே எங்களிடம் ரூ.25 லட்சம் பெற்று மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, எங்களுடைய பணத்தை திரும்ப பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

மேலும் செய்திகள்