தாளவாடி, ஆசனூர் பகுதியில் தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்; வாழை, கரும்பு-தென்னை மரங்கள் நாசம்

தாளவாடி, ஆசனூர் பகுதியில் தோட்டத்துக்குள் புகுந்த யானைகள், வாழை, கரும்பு மற்றும் தென்னை மரங்களை நாசப்படுத்தின.

Update: 2021-03-18 23:13 GMT
தாளவாடி
தாளவாடி, ஆசனூர் பகுதியில் தோட்டத்துக்குள் புகுந்த யானைகள், வாழை, கரும்பு மற்றும் தென்னை மரங்களை நாசப்படுத்தின.
வனவிலங்குகள்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட ஆசனூர் வனச்சரகத்தில் யானை, மான், புலி, சிறுத்தை, காட்டெருமை உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்தநிலையில் யானைகள் அருகே உள்ள விவசாய தோட்டத்துக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர் கதையாகி வருகிறது. 
ஆசனூரை சேர்ந்தவர் சிவக்குமார் (42). விவசாயி. இவர் தனது தோட்டத்தில் உள்ள பண்ணை வீட்டில் வசித்து வருகிறார். இங்கு அவர் 1½ ஏக்கர் பரப்பளவில் பீன்ஸ்  சாகுபடி செய்துள்ளார். சிவக்குமார் நேற்று காலை வழக்கம்போல் தனது தோட்டத்துக்கு சென்றார்.
யானைகள் அட்டகாசம்
அப்போது தோட்டத்தில் பீன்ஸ் பயிர்களும், தென்னை மரங்களும் சேதப்படுத்தப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்த வந்த காட்டு யானைகள்  சிவக்குமாரின் தோட்டத்துக்குள் புகுந்தன. அங்கு பயிர் செய்யப்பட்டு இருந்த பீன்ஸ் பயிரை காலால் மிதித்து நாசப்படுத்தியுள்ளன. மேலும் அங்கு நடப்பட்டு இருந்த தென்னை மரங்களை துதிக்கையால் பிடுங்கி வீசியுள்ளன. பின்னர் அதிலுள்ள தென்னங்குருத்துகளை பறித்து தின்று சேதப்படுத்திவி்ட்டு வனப்பகுதிக்குள் சென்றுள்ளன. இதில் 40 தென்னை மரங்கள் நாசமாயின.
வனத்துறையினர் ஆய்வு
இதுகுறித்து விவசாயி சிவக்குமார் ஆசனூர் வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். அதைத்தொடர்ந்து வனத்துறையினர் அங்கு சென்று சேதமடைந்த பயிர் மற்றும் தென்னை மரங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிக்கு ஆறுதல் கூறினார்கள்.
மற்றொரு சம்பவம்
இதேபோல் தாளவாடி அருகே உள்ள கெட்டவாடியைச் சேர்ந்தவர் இளங்கோ (42) இவர் தனது 3 ஏக்கர் தோட்டத்தில் வாழை மற்றும் கரும்பு சாகுபடி செய்துள்ளார். இரவு நேரத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் இளங்கோவின் தோட்டத்துக்குள் புகுந்தன. பின்னர் வாழைகளை தின்றும், காலால் மிதித்தும் சேதப்படுத்தின. சத்தம் கேட்டு் அருகே உள்ள வீட்டில் தூங்கி கொண்டிருந்த இளங்கோ திடுக்கிட்டு எழுந்தார்.
பின்னர் அக்கம்பக்கத்து விவசாயிகளுடன் அங்கு சென்று, பட்டாசு வெடித்து யானைகளை காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டார். சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு யானைகள் காட்டுக்குள் சென்றன. அவரது தோட்டத்தில் மொத்தம் ½ ஏக்கர் பரப்பளவிலான வாழை மற்றும் 1 ஏக்கர் பரப்பளவிலான கரும்பு பயிர்  சேதமடைந்தன. சேதமடைந்த பயிருக்கு வனத்துறையினர் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டு்ம் என்று பாதிக்கப்பட்ட 2 விவசாயிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்