மழையின்போது சகதியில் சிக்கி காயமடைந்த கூலித் தொழிலாளிக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு; மனித உரிமை ஆணையம் உத்தரவு

மழையின்போது சகதியில் சிக்கி காயமடைந்த கூலித் தொழிலாளிக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Update: 2021-03-20 11:51 GMT
சென்னை பெரம்பூரைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது 65). இவர், மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘கடந்த 2018-ம் ஆண்டு பெய்த மழையின்போது சகதியில் சிக்கி கீழே விழுந்ததில் எனக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. அப்போது சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். அறுவைசிகிச்சைக்கு பின்பு என்னை அவசர அவசரமாக ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்தனர். காயம் குணமாகாததால் அதே ஆஸ்பத்திரியில் மீண்டும் சேர்ந்தேன். அதன்பின்பும் காயம் குணமாகவில்லை. அதனால் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்ந்தேன். அங்கு என்னைப் பரிசோதித்த டாக்டர், முறையாக அறுவை சிகிச்சை செய்யாததால் காயம் குணமாகவில்லை என்றார். முறையாக சிகிச்சை அளிக்காததால் என்னால் நடக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, எனக்கு உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்' என்று கூறியிருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி துரை ஜெயச்சந்திரன், ‘மனுதாரர் கூலித் தொழிலாளி. அவரின் வருமானத்தை மட்டுமே நம்பி குடும்பம் உள்ளது தெரிகிறது. அவருக்கு ஏற்பட்ட காயம் குணமடையாததால் குடும்பம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு, மனுதாரருக்கு இழப்பீடாக ரூ.3 லட்சத்தை 4 வாரத்துக்குள் வழங்க வேண்டும்' என்று உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்