ஈரோடு கீரக்காரவீதி அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் குண்டம் விழா- ஏராளமான பக்தர்கள் தீ மிதித்தனர்

ஈரோடு கீரக்காரவீதி அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் குண்டம் விழாவில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்தனர்.

Update: 2021-03-20 22:36 GMT
ஈரோடு
ஈரோடு கீரக்காரவீதி அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் குண்டம் விழாவில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்தனர்.
அங்காளபரமேஸ்வரி அம்மன்
ஈரோடு கீரக்கார வீதி பகுதியில் பிரசித்திபெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 11-ந்தேதி மகா சிவராத்திரி உற்சவ நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து அன்று இரவு அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
14-ந்தேதி காலை பக்தர்கள் ஈரோடு காரைவாய்க்காலுக்கு சென்று காலிங்கராயன் வாய்க்காலில் தீர்த்தம் எடுத்தும், பால் குடம் எடுத்தும் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கோவிலுக்கு வந்தனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பக்தர்கள் தீ மிதித்தனர்
கடந்த 18-ந்தேதி அக்கினி கபாலமும், நேற்று முன்தினம் இரவு குண்டம் பற்ற வைத்தல் நிகழ்ச்சியும் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்கும் விழா நேற்று அதிகாலை நடந்தது. முன்னதாக குண்டத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் முதலில் குண்டம் இறங்கினார்கள்.
அவர்களை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினார்கள். குண்டம் விழாவையொட்டி அங்காளபரமேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு முத்து பல்லக்கில் அம்மன் சிங்க வாகனத்தில் திருவீதி உலா நடந்தது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை மறு அபிஷேகத்துடன் விழா நிறைவடைகிறது.

மேலும் செய்திகள்