கொரோனா தடுப்பூசி போட ஆர்வம் காட்டாத வாக்குச்சாவடி அலுவலர்கள்

கடலூர் மாவட்டத்தில், கொரோனா தடுப்பூசி போட வாக்குச்சாவடி அலுவலர்கள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் சுகாதாரத்துறையினர் வேதனை அடைந்தனர்.

Update: 2021-03-21 19:04 GMT
கடலூர், 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வந்த நிலையில், அதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், சோப்பு போட்டு கைகளை கழுவுதல், சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்தல் போன்ற பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இதன் மூலம் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைய தொடங்கியது. இதற்கிடையில் கொரோனா தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்பட்டு, முன் களப்பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள் தடுப்பூசி போட தொடங்கினர்.

கொரோனா தடுப்பூசி

அதன்பிறகு 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய்கள் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போட அரசு உத்தரவிட்டது. அதன்படி அவர்களும் கொரோனா தடுப்பூசி போட தொடங்கினர். இருப் பினும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோரால் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியது.
கடலூர் மாவட்டத்தில் ஒற்றை இலக்கை எண்ணிக்கையில் இருந்து இரட்டை இலக்க எண்ணிக்கையில் பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கிடையில் சட்டமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட அரசு உத்தரவிட்டது.

ஏற்பாடு

மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பணியில் ஈடுபடும் 14 ஆயிரத்து 404 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கும், வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்துவது குறித்த முதல் கட்ட பயிற்சி வகுப்பில் கொரோனா தடுப்பூசி போட மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தி இருந்தார்.
அதன்படி நேற்று 9 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி நடந்தது. இதில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தடுப்பூசி போட சுகாதாரத்துறையினர் ஏற்பாடு செய்தனர். டாக்டர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள் என தொகுதிக்கு 6 குழுக்கள் அமைக்கப்பட்டு இருந்தது.

ஆர்வம் காட்டவில்லை

ஆனால் பயிற்சிக்கு சென்ற வாக்குச்சாவடி அலுவலர்கள் பெரும்பாலானவர்கள் தடுப்பூசி போட ஆர்வம் காட்டவில்லை. அவர்கள் பயிற்சி முடிந்த பிறகு தடுப்பூசி போட்டுக்கொள்வதாக தெரிவித்தனர். ஆனால் பயிற்சி முடிந்ததும் அவர்கள் தடுப்பூசி போடாமல் சென்று விட்டனர்.
நேற்று 2 பிரிவுகளாக நடந்த பயிற்சி வகுப்பில் 14 ஆயிரத்து 404 பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயித்ததில், 2 ஆயிரத்திற்கும் குறைவான அலுவலர்களே தடுப்பூசி போட்டுக்கொண்டதாக சுகாதாரத்துறையினர் வேதனை தெரிவித்தனர். முன் களப்பணியாளர்கள், தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய்கள் உள்ளவர்கள் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்