தேர்தல் பிரசாரத்திற்கு சென்றவர்கள் மீது தாக்குதல்

தேர்தல் பிரசாரத்திற்கு சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

Update: 2021-03-23 21:02 GMT
நொய்யல்
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா பண்ணப்பட்டி அருகே சந்தமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி(வயது 40). இவர் கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே கதிரிகை படேல் மஞ்சுஹவுஸ் பகுதியில் துணி வியாபாரம் செய்து வருகிறார். இவர், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலைக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறாா். சம்பவத்தன்று மாலை 4 மணி அளவில் பா.ஜ.க. பிரசார வாகனத்தில் புன்னம் சத்திரத்திலிருந்து பொண்ணியாக் கவுண்டன்புதூருக்கு வாக்கு சேகரிக்க காகித ஆலை அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த தி.மு.க.வைச் சேர்ந்த சிலர், பாலசுப்பிரமணி மற்றும் அவருடன் வந்த கார்த்திக் மற்றும் சிலரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில், பாலசுப்பிரமணி மற்றும் கார்த்திக் ஆகிய இருவரும் காயம் அடைந்தனர். அவர்கள் கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீசில் பாலசுப்பிரமணி கொடுத்த புகாரின்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சிதம்பரபாரதி தாக்குதல் நடத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக தி.மு.க.வினர் 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்