கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் தன்னார்வலர்களுக்கு பயிற்சி

தேனி மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்களில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட உள்ள தன்னார்வலர்களுக்கான பயிற்சி வகுப்பை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2021-03-24 12:39 GMT
தேனி:
பயிற்சி வகுப்பு
தேனி அருகே கொடுவிலார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் தன்னார்வலர்களுக்கு பயிற்சி வகுப்பு நடந்தது. 

இந்த பயிற்சியை மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கிருஷ்ணனுண்ணி பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

அப்போது அவர் கூறியதாவது:-
தேனி மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 1,561 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

உலக நாடுகள் மற்றும் இந்தியாவில் உள்ள ஒரு சில மாநிலங்களில் கொரோனா நோய் தொற்று 2-வது கட்ட அலையாக உருவாகி உள்ளதன் அடிப்படையில் தமிழகத்தில் நோய் தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதனடிப்படையில் வாக்குச்சாவடிகளில் தேர்தல் வாக்குச்சாவடி அலுவலர்களுடன் இணைந்து கொரோனா நோய் பரவுதலை தடுக்கும் பொருட்டு ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் தலா இரண்டு தன்னார்வலர்கள் வாக்குப்பதிவு நாளன்று பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 

அவர்களில் ஒரு தன்னார்வலர் வாக்காளர்களின் உடல் வெப்பநிலையை தெர்மல் ஸ்கேனர் கருவி கொண்டு பரிசோதிப்பார். 

மற்றொரு தன்னார்வலர் வாக்காளர்களுக்கு கிருமி நாசினி மற்றும் கையுறை வழங்குவார்.

3,600 தன்னார்வலர்கள்
வாக்குப்பதிவு முடிந்தவுடன் இந்த கையுறைகள் உள்பட வாக்குச்சாவடி அலுவலர்கள் பயன்படுத்திய அனைத்து பாதுகாப்பு உபகரணங்களை குப்பைத் தொட்டியில் சேகரித்து அதற்கான வாகனங்களில் ஒப்படைப்பார்கள். 

இது தொடர்பாக தேனி மாவட்டத்தில் சுமார் 3 ஆயிரத்து 600 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பொது சுகாதாரத் துறையின் கீழ் பணியாற்றி வரும் வட்டார சுகாதார கண்காணிப்பாளர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் பயிற்சி அளித்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் வெளியே செல்லும்போது முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கிருமிநாசினி கொண்டு கைகழுவுதல், கூட்ட நெரிசலை தவிர்த்தல் உள்ளிட்ட அரசால் வகுக்கப்பட்ட விதிமுறைகளை சரிவர கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது மகளிர் திட்ட அலுவலர் சிவக்குமார், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்