நகை கடையில் கொள்ளை முயற்சி

குளச்சல் அருகே நகைக்கடையில் கொள்ளை முயற்சி நடந்தது. அப்போது அலாரம் ஒலித்ததால் ஒருவர் சிக்கினார். லட்சக்கணக்கான மதிப்புள்ள நகைகள் தப்பின.

Update: 2021-03-24 18:31 GMT
குளச்சல்:
குளச்சல் அருகே நகைக்கடையில் கொள்ளை முயற்சி நடந்தது. அப்போது அலாரம் ஒலித்ததால் ஒருவர் சிக்கினார். லட்சக்கணக்கான மதிப்புள்ள நகைகள் தப்பின.
நகைக்கடை
குளச்சல் அருகே ஆலஞ்சி தெற்கு நீர்வக்குழியை சேர்ந்த மரிய மிக்கேல் மகன் தாமஸ் ஜெகன் பிரபு (வயது 35). இவர் ஆலஞ்சி சந்திப்பில் நகைக் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வியாபாரம் சம்பந்தமாக வெளியூர் சென்று விட்டார்.
இந்த நிலையில் நள்ளிரவில் அந்த கடையில் நகைகளை கொள்ளையடிப்பதற்காக மர்ம நபர்கள் வந்தனர்். 
கொள்ளை முயற்சி
அவர்கள் கடையின் பூட்டை உடைத்தனர். அப்போது தாமஸ் ஜெகன் பிரபு செல்போனில் நகைக்கடையில் கொள்ளை முயற்சி நடந்ததை தொடர்ந்து, அலாரம் அடிக்கும் சிக்னல் கிடைத்தது.
உடனே அவர் குளச்சல் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதற்குள் அலாரம் ஒலிக்கும் சத்தம் கேட்டு, அருகில் வசிப்பவர்கள் கடை முன் திரண்டனர். பொது மக்கள் வருவதை கண்டதும் ஒருவர் தப்பி ஓடி விட்டார். இன்னொருவர் பொதுமக்களிடம் சிக்கினார்.
விசாரணை
இந்த நிலையில் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்தனர். அவர்களிடம், வாலிபரை பொதுமக்கள் ஒப்படைத்தனர். பிடிபட்ட வாலிபரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபற்றி தாமஸ் ஜெகன் பிரபு குளச்சல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடியவரை தேடி வருகிறார்கள். 
கடை பூட்டை யாராவது உடைத்தால், அலாரம் ஒலிக்கும் வகையில் தாமஸ் ஜெகன் பிரபு ஏற்பாடு செய்து இருந்ததால், கடையில் இருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகைகள் தப்பின.
ஏற்கனவே 3 மாதங்களுக்கு முன்பும் மர்ம நபர்கள் அருகில் உள்ள 4 டிரான்ஸ்பார்மரை அணைத்துஇவரது நகைக்கடையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர்  என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்