பாராசூட் சாகசம் மூலம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு

பாராசூட் சாகசம் மூலம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

Update: 2021-03-30 18:39 GMT
பனைக்குளம்
தமிழக சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார். ராமேசுவரம் செல்லக்கூடிய சாலையின் அருகாமையில் உள்ள சாத்தக்கோன்வலசை ஊராட்சிக்கு உட்பட்ட அரியமான் கடற்கரையில் தொடர்ந்து வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரியமான் கடற்கரை பகுதியில் அதிகமான மீனவர்கள் வசித்து வருகின்றனர். மேலும் சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். குறிப்பாக கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் தேர்தல் நடவடிக்கையில் பங்கேற்றல் முதல்முறை வாக்காளர்கள், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்பட அனைத்துத் தரப்பு வாக்காளர்களையும் தேர்தல் நடவடிக்கையில் ஊக்குவித்தல், 100 சதவீத வாக்குப்பதிவு நேர்மையாக வாக்களித்தல் உள்ளிட்ட நோக்கங்களை வலியுறுத்தி அரியமான் கடற்கரையில் பல்வேறு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் பாராசூட் சாகசம் மூலம் வாக்காளர் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு சுமார் 250 மீட்டர் பாராசூட்டில் பறந்து வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பிரதீப்குமார் முன்னிலையில் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மேலும் கலெக்டர் பேசும்போது, தேர்தல் நடவடிக்கைகளில் இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்க வேண்டுமெனவும் ஓட்டுக்கு பணம் பெறுவது குற்றம், 100 சதவீத நேர்மையாக வாக்களிப்போம் எனவும் அறிவுரை வழங்கி பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் அனைவர்களும் முக கவசம் அணிந்து தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் பேசினார். அப்போது ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கேசவதாசன் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்