பரமத்திவேலூர் அருகே சோகம்: சுவர் இடிந்து விழுந்து பெண் உள்பட 2 பேர் பலி

பரமத்திவேலூர் அருகே சோகம்: சுவர் இடிந்து விழுந்து பெண் உள்பட 2 பேர் பலி

Update: 2021-04-01 10:25 GMT
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் அருகே புதிய வீடு கட்டுமான பணியில் சுவர் இடிந்து விழுந்து பெண் உள்பட 2 பேர் பலியாகினர். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
கான்கிரீட் சிலாப்
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூரை சேர்ந்தவர் கயல்விழி. இவர் புதிய வீடு கட்ட முடிவு செய்தார். இதற்காக  பொத்தனூரை சேர்ந்த கட்டிட தொழிலாளியான ஆறுமுகம் என்பவர் ஒப்பந்த அடிப்படையில் எடுத்து வீட்டை கட்டிக் கொண்டு இருந்தார். 
இந்தநிலையில் வீடு கட்டுவதற்காக 50 அடி நீளத்தில் 7 அடி உயரத்தில் சுவற்றை எழுப்பி அதற்கு மேல் பொருட்களை வைப்பதற்காக 50 அடி நீளத்தில் கான்கிரீட் சிலாப் அமைத்துள்ளனர். நேற்று சுவற்றின் பூச்சு வேலையில் பொத்தனூரை சேர்ந்த கட்டிட தொழிலாளி மாதேஸ்வரன் (வயது 50), பழனியப்பன் (50), திருச்சி மாவட்டம் உன்னியூரை சேர்ந்த குணசேகரன் (42) மற்றும் பொத்தனூரை சேர்ந்த அஞ்சலையம்மாள் (60), கோவிந்தம்மாள் (65), பாரதி ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். 
2 பேர் பலி
அப்போது 50 அடி நீள சுவருக்கு மேலே இருந்த 50 அடி நீள கான்கிரீட் சிலாப் சுவருடன் திடீரென இடிந்து விழுந்தது. இதில் பூச்சு வேலையில் ஈடுபட்டிருந்த பாரதியை தவிர மற்ற 5 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடினர். இதில் மாதேஸ்வரன் மற்றும் அஞ்சலையம்மாள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். படுகாயமடைந்த பழனியப்பன், குணசேகரன், மற்றும் கோவிந்தம்மாள் ஆகிய 3 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 
அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு 3 பேரும் மேல்சிகிச்சைக்காக நாமக்கல் மற்றும் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொத்தனூரில் புதிய வீடு கட்டும்போது கான்கிரீட் இடிந்து விழுந்து 2 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
======

மேலும் செய்திகள்