தனுஷ்கோடி கடற்பகுதியில் ஆபத்தை அறியாமல் செல்பி எடுக்கும் சுற்றுலா பயணிகள்

தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றத்தினால் ஏற்படும் ஆபத்தை அறியாமல் துறைமுக பகுதிக்குள் சென்று சுற்றுலாப்பயணிகள் செல்பி எடுத்து விளையாடும் நிலை உள்ளது

Update: 2021-04-03 16:20 GMT
ராமேசுவரம்
தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றத்தினால் ஏற்படும் ஆபத்தை அறியாமல் துறைமுக பகுதிக்குள் சென்று சுற்றுலாப்பயணிகள் செல்பி எடுத்து விளையாடும் நிலை உள்ளது. 
கடல் சீற்றம்
ராமேசுவரம் அருகே உள்ளது புயலால் அழிந்து போன தனுஷ்கோடி கடல் பகுதி. அதுபோல் தனுஷ்கோடி கடல் பகுதி இயற்கையாகவே கடல் சீற்றம் மற்றும் நீரோட்டமுள்ள கடல் பகுதியாகும். இந்தநிலையில் வங்கக்கடலில் அந்தமானுக்கு தென் கிழக்கே சுமார் 400 கிலோ மீட்டர் தூரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள இந்த புயல் சின்னத்தை தொடர்ந்து தனுஷ்கோடி கடல் பகுதியில் கடந்த 3 நாட்களாக வழக்கத்திற்கு மாறாக கடல் சீற்றமாக காணப்படுவதுடன் பலத்த காற்று வீசி வருகின்றது. 
தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றமாக காணப்படுவதுடன் எம்.ஆர். சத்திரம் கடற்கரையில் உள்ள துறைமுகத்தில் மோதி கடல் அலைகள் பல அடி உயரத்திற்கு ஆக்ரோஷமாக மேல்நோக்கி சீறி எழுந்து வருகின்றன. துறைமுகத்தில் மோதி பல அடி உயரத்திற்கு மேல் நோக்கி சீறி எழுந்து வரும் கடல் அலையை பார்ப்பதற்கு ஆபத்தை அறியாமல் துறைமுக பகுதிக்குள் சென்று ஏராளமான சுற்றுலாப்பயணிகள் செல்பி எடுத்து விபரீதமாக விளையாடி வருகின்றனர். தனுஷ்கோடி எம்.ஆர். சத்திரம் கடற்கரையில் சோதனைச்சாவடியில் உள்ள போலீசார் அனைவரும் தேர்தல் பணிக்கு அனுப்பப்பட்டு விட்டதால் சோதனைச்சாவடியும் போலீசார் இல்லாமல் மூடப்பட்டு கிடக்கின்றன.
எல்லை மீறும் சுற்றுலாப்பயணிகள்
சோதனை சாவடியில் போலீசார் இல்லாததாலும், துறைமுக பகுதிக்குள் தடையை மீறி சுற்றுலா பயணிகளை உள்ளே செல்லாமல் தடுத்து நிறுத்துவதற்கு அங்கு பாதுகாப்பு பணியில் ஒருவர்கூட இல்லாத காரணத்தால் தனுஷ்கோடி வரும் சுற்றுலா பயணிகள் ஆபத்தை அறியாமல், சர்வ சாதாரணமாக சென்று துறைமுக பகுதியில் நின்று ஆபத்தான முறையில் வேடிக்கை பார்த்து செல்பி எடுத்து வருகின்றனர். 
ஆகவே தனுஷ்கோடி எம்.ஆர். சத்திரம் துறைமுக கடல்பகுதியில் கடல் சீற்றத்தால் சுற்றுலாப் பயணிகள் யாரும் கடலில் விழுவதை தடுக்க அங்கு சரியான தடுப்பு கம்பிகள் அமைத்து கயிறுகள் கட்டி சுற்றுலாப்பயணிகள் உள்ளே செல்வதை தடுக்க சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்