பறக்கும் படை சோதனையின்போது வங்கிக்கு எடுத்துச்சென்ற ரூ.1¾ கோடி சிக்கியது

பறக்கும் படை சோதனையின் போது வங்கிக்கு எடுத்துச்சென்ற ரூ.1¾ கோடி சிக்கியது.

Update: 2021-04-03 17:08 GMT
பறக்கும் படை சோதனையின் போது வங்கிக்கு எடுத்துச்சென்ற ரூ.1¾ கோடி சிக்கியது.
வழித்தடம்
ஈரோட்டில் உள்ள ஒரு அரசுடமையாக்கப்பட்ட வங்கியில் இருந்து நேற்று ரூ.2 கோடியே 80 லட்சம் ஒரு வேனில் ஏற்றப்பட்டு, சித்தோடு பகுதியில் உள்ள அதன் வங்கி கிளைகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.
முன்னதாக இதுபற்றி ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியும், ஆர்.டி.ஓ.வுமான சைபுதீனுக்கு வங்கி அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர். அப்போது வங்கி அதிகாரிகள் வேனில் ஏற்றப்பட்ட பணம், ஈரோடு முதல் சித்தோடு வரை சென்று திரும்பும் வகையில் வழித்தடத்தை மெயிலில் ஆர்.டி.ஓ.வுக்கு அனுப்பி உள்ளனர்.
ரூ.1¾ கோடி சிக்கியது
ஆனால் ஆர்.டி.ஓ.வுக்கு மெயிலில் அனுப்பிய வழித்தடத்தில் செல்லாமல், கதிரம்பட்டி வாய்க்கால்மேடு கரை வழியாக வேன் சென்றுள்ளது. அப்போது அங்கு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.
அப்போது அந்த வேனில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வேனில் கொண்டு செல்லப்பட்ட பணத்தில் ரூ.1 கோடியே 10 லட்சம் வங்கி கிளைகளுக்கு வழங்கப்பட்டதும், மீதி ரூ.1 கோடியே 70 லட்சம் வேனில் இருந்ததும் தெரியவந்தது. மேலும் ஈரோட்டில் இருந்து சித்தோடு செல்வதாக ஒரு வழித்தடத்தை ஆவணங்களில் பதிவு செய்து, வேறு வழித்தடத்தில் பணத்தை கொண்டு சென்றதால் பறக்கும் படை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் வாகனத்துடன் பணத்தையும் பறிமுதல் செய்து ஈரோடு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
கருவூலம்
இதைத்தொடர்ந்து வருமான வரித்துறையினர் ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு வந்து பணம் கொண்டு சென்றதற்கான ஆவணங்களை சரி பார்த்தனர். அப்போது, தனியார் வாகனத்தில் எவ்வாறு அரசு வாகனம் என்று எழுதி உள்ளீர்கள். குறிப்பிட்ட வழித்தடத்தை மாற்றி ஏன் வந்தீர்கள் என்பது உள்பட பல்வேறு கேள்விகளை அதிகாரிகள் கேட்டனர். இதற்கிடையில் ஆர்.டி.ஓ. சைபுதீன் தேர்தல் பணிக்காக வெளியில் சென்றிருந்தார். அலுவலகத்துக்கு அவரால் வரமுடியில்லை. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை அதிக நேரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் வைக்க வேண்டாம் என்றும், அந்த பணத்தை உடனடியாக மாவட்ட கருவூலத்துக்கு கொண்டு செல்லும்படியும் ேதர்தல் பறக்கும் படை அதிகாரிகளிடம் ஆர்.டி.ஓ. சைபுதீன் அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் மாவட்ட கருவூலத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

மேலும் செய்திகள்