வாக்காளர்களுக்கு பணம் வினியோகம்; அ.தி.மு.க.-பா.ம.க.வை சேர்ந்த 3 பேர் மீது வழக்கு

ஆண்டிமடத்தில் வாக்காளர்களுக்கு பணம் வினியோகித்ததாக அ.தி.மு.க., பா.ம.க.வை சேர்ந்த 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களிடம் இருந்த ரூ.56 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

Update: 2021-04-04 20:32 GMT
ஆண்டிமடம்:

பணம் வினியோகம்
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் மற்றும் போலீசார் ஆண்டிமடம் கடைவீதி மற்றும் சுப்பிரமணியர் கோவில் தெருவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிலர் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்து கொண்டிருந்தனர்.
போலீசார் வருவதை கண்டதும் அவர்கள் தப்பி ஓட முயன்றனர். இதைக்கண்ட போலீசார், அவர்களை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர்.
3 பேர் மீது வழக்கு
இதில் அவர்கள், ஆண்டிமடம்-விளந்தை சுப்பிரமணியர் கோவில் தெருவை சேர்ந்த கோபிநாத் (வயது 35), தோப்புத்தெருவை சேர்ந்த முருகேசன் (45), எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த தர்மலிங்கம் (65) என்பதும், தா்மலிங்கம் அ.தி.மு.க.ைவ ேசா்ந்தவா் என்பதும், மற்ற 2 பேரும் பா.ம.க.வை சேர்ந்தவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து அவர்களிடம் இருந்த ரூ.56 ஆயிரத்து 380-ஐ போலீசார் கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் 3 பேர் மீதும் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

மேலும் செய்திகள்