கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

ஈஸ்டர் பண்டிகையையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

Update: 2021-04-04 20:33 GMT
பெரம்பலூர்:
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு, மீண்டும் உயிர் பெற்ற நாளை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். அன்றைய தினம் கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து ஆலயங்களுக்கு சென்று, அங்கு நடைபெறும் சிறப்பு பிரார்த்தனை, திருப்பலி ஆகியவற்றில் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டு ஈஸ்டர் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் நள்ளிரவு முதல் சிறப்பு பிரார்த்தனை மற்றும் இயேசு உயிர்த்து எழும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பெரம்பலூர் புனித பனிமயமாதா ஆலயத்தில் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. பின்னர் நள்ளிரவு 12 மணிக்கு இயேசு உயிர்ப்பு பெருவிழா திருப்பலி நடந்தது. இதற்கு ஆலய பங்குத்தந்தை ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். அப்போது அங்கு கூடியிருந்த கிறிஸ்தவர்கள் அனைவரும் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி இயேசு வாழ்த்து பாடினர். இதில் அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்