10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சி தொடர நியாயமான காரணங்களை கூற முடியுமா? கே.எஸ்.அழகிரி கேள்வி

10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சி தொடர நியாயமான காரணங்களை கூற முடியுமா? கே.எஸ்.அழகிரி கேள்வி.

Update: 2021-04-05 02:53 GMT
சென்னை, 

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு பாடம் புகட்ட, அ.தி.மு.க.வின் அராஜக ஊழல் ஆட்சியை அகற்ற, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரிப்பதென தமிழக மக்கள் முடிவு செய்து விட்டார்கள். தேர்தல் பிரசாரங்களில் பெருந்திரளான, அடர்த்தியான மக்கள் கூட்டம் அணி திரண்டு வருவதே அதற்கு சாட்சி. இதை சகித்துக்கொள்ள முடியாத அ.தி.மு.க., ஆதாரமற்ற அவதூறு கருத்துக்களை கூறி, கடைசி நாளில் கோயபல்ஸ் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறது. 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் சாதனைகள் என்று எதையும் கூற துணிவற்ற நிலையில் இத்தகைய அவதூறு பிரசாரங்களில் ஈடுபடுவது பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணிக்கு தோல்வி பயம் வெளிப்பட்டு விட்டதையே வெளிப்படுத்துகிறது. 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சி தொடர்வதற்கு நியாயமான காரணங்கள் ஏதாவது ஒன்றை கூற முடியுமா?

50 ஆண்டுகால அரசியல், நிர்வாக அனுபவம் பெற்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைவர் மு.க. ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆவது காலத்தின் கட்டாயம். இதற்கு மக்களிடையே அமோக ஆதரவு பெருகி வருகிறது. மத்திய பா.ஜ.க. அரசின் பிடியிலிருந்து தமிழகத்தை விடுவிக்க, அராஜக ஊழல் ஆட்சி நடத்துகிற அ.தி.மு.க. ஆட்சியை அகற்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தமிழக மக்கள் வாக்களிக்கவேண்டும். ஆட்சி மாற்றத்தின் மூலமே தமிழகத்துக்கு விடிவு காலம் ஏற்பட முடியும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்