பறக்கும் படையினரை கண்டதும் சாலையோரத்தில் பணப்பை வீச்சு; 4 பேர் கைது

அரியலூரில் பறக்கும் படையினரை கண்டதும் சாலையோரத்தில் பணப்பையை வீசிய அ.தி.மு.க.வினர் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-04-05 20:08 GMT
அரியலூர்:
அரியலூர் ராஜாஜி நகர் பகுதியில் நேற்று முன்தினம் உதவி தாசில்தார் தேவதாசன் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் ஆய்வுக்காக சென்றனர். அவர்களது வாகனத்தை பார்த்த 4 வாலிபர்கள் கையில் இருந்த பையை சாலையோரம் வீசிவிட்டு தப்பிக்க முயன்றனர்.
அப்போது பறக்கும் படையில் உள்ள போலீசார், 4 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். மேலும் அவர்கள் தூக்கி வீசிய பையை எடுத்து பார்த்தபோது அதில் பணம் இருந்தது. அந்தப் பணம் யாருடையது, எங்கு கொண்டு செல்கிறீர்கள் என்று பறக்கும் படையினர் கேட்டபோது, கூட்டுறவு வங்கிக்கு கொண்டு செல்வதாகவும், பின்னர் முன்னுக்குப்பின் முரணாகவும் 4 ேபரும் பதில் அளித்தனர்.
இதில் சந்தேகம் அடைந்த உதவி தாசில்தார், அவர்கள் 4 பேரையும் அரியலூர் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் மில்க் மணி, ரவிச்சந்திரன், பாலகிருஷ்ணன், செந்தமிழ்செல்வன் என்பதும், அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. அவர்கள் வாக்காளர்களுக்கு பணம் வினியோகித்தார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தினார்கள்.
ேமலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ரூ.92 ஆயிரத்தை பறிமுதல் செய்து, அரியலூர் கருவூலத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்