மனைவி மது குடிக்க பணம் தராததால் செல்போன் கோபுரத்தில் ஏறி தொழிலாளி தற்கொலை முயற்சி சாத்தான்குளம் அருகே பரபரப்பு

சாத்தான்குளம் அருகே மது குடிக்க மனைவி பணம் தராததால், தொழிலாளி செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

Update: 2021-04-07 12:38 GMT
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே மதுகுடிக்க மனைவி பணம் தராததால் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளியால் பரபரப்பு ஏற்பட்டது.
கூலித்தொழிலாளி
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள முதலூரைச் சேர்ந்தவர் அந்தோணிராஜ் மகன் ஜெபராஜ் (வயது 28). இவருக்கு திருமணமாகி ஜெபா என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். 
கூலித்தொழிலாளியான ஜெபராஜ் அடிக்கடி மது அருந்தி விட்டு வீட்டில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே பிரச்சினை இருந்து வந்தது.
இந்த நிலையில் தேர்தல் நாளான நேற்று முன்தினம் ஜெபராஜ் வாக்காளர் அடையாள அட்டையை காட்டி ஓட்டு போட்டு விட்டு தனது வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது ஜெபா, தனது கணவரின் வாக்காளர் அட்டையை பிடுங்கி வைத்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மது குடிக்க பணம் தரும்படி தனது மனைவி ஜெபாவிடம், ஜெபராஜ் கேட்டார். ஆனால், அவர் பணம் கொடுக்க மறுத்துவிட்டார்.
தற்கொலை மிரட்டல்
இதனால் விரக்தி அடைந்த ஜெபராஜ், வீட்டில் மனைவி உள்ளிட்டோர் தன்னை மதிக்கவில்லை எனக்கூறி, முதலூர் -சுப்பிரமணியபுரம் சாலையில் பி.எஸ்.என்.எல். அலுவலக வளாகத்தில் உள்ள 150 அடி உயர செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
இதனை பார்த்த முதலூர் ஊராட்சி மன்ற தலைவர் பொன்முருகேசன், தட்டார்மடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் தலைமையில் போலீசார் வந்து ஜெபராஜிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தை
மேலும், சாத்தான்குளம் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் மாரியப்பன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். சாத்தான்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு காட்வின் ஜெகதீஷ்குமார், கிராம நிர்வாக அலுவலர்கள் சத்தியராஜ், மசபியேல் ஆகியோரும் வந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஜெபராஜ் நண்பர்களும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது, ஜெபராஜ் தனக்கு குடும்பத்தில் யாரும் மரியாதை தர மறுக்கிறார்கள். எனது வாக்காளர் அடையாள அட்டையை மனைவி பிடுங்கி வைத்து விட்டு, மதுகுடிக்க பணம் தர மறுக்கிறார் என தெரிவித்து தனது செல்போன், காலணி ஆகியவற்றை கீழே வீசினார்.
பரபரப்பு
இந்த சம்பவத்தை அறிந்து கிராம மக்கள் பலர் அங்கு கூடினர். தொடர்ந்து ஜெபா மற்றும் குடும்பத்தினர் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 1½ மணி நேர போராட்டத்திற்கு பின்னர் ஜெபராஜை தீயணைப்பு படையினர் கீேழ இறக்கி அழைத்து வந்தனர். பின்னர் விசாரணை நடத்தி அவருக்கு அறிவுரை கூறி போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்