வாக்குப்பதிவு எந்திரத்தில் பா.ம.க. சின்னம் மறைப்பு

கன்னிவாடியில் உள்ள வாக்குச்சாவடியில், வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னம் மறைக்கப்பட்டது குறித்து தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த வாக்குச்சாவடியில் இறந்த ஒருவரின் வாக்கு, பதிவாகி இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-04-07 14:24 GMT
கன்னிவாடி: 

 இறந்தவரின் ஓட்டு பதிவு

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கன்னிவாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில், நேற்று முன்தினம் நடந்த வாக்குப்பதிவின்போது கூடுதலாக ஒரு ஓட்டு பதிவாகி இருந்தது.

அதாவது, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த அம்பேத்கர் என்பவரின் ஓட்டை யாரோ ஒருவர் பதிவு செய்துள்ளார். இதுகுறித்து வாக்குச்சாவடி அலுவலர்களிடம் விளக்கம் கேட்டு ஏஜெண்டுகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு பணிபுரிந்த ஊழியர் ஒருவரே அந்த ஓட்டை போட்டிருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து வாக்குப்பதிவு முடிந்தவுடன் சரிபார்ப்பு படிவத்தில் ஏஜெண்டுகள் கையெழுத்திட மறுத்து விட்டனர். மேலும் அந்த வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று ஏஜெண்டுகள் கோரிக்கை விடுத்தனர்.

 வேட்பாளர் மறியல்

இதுகுறித்து தகவல் அறிந்த பா.ம.க. வேட்பாளர் திலகபாமா தலைமையில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ஆர்.கே. சுப்பிரமணி, பசும்பொன், நகர செயலாளர் முருகன், துணை செயலாளர் பி.முருகன் மற்றும் அ.தி.மு.க. கூட்டணி கட்சியினர் அங்கு திரண்டனர்.

பின்னர் அவர்கள், வாக்குச்சாவடியில் பணிபுரிந்த அலுவலர்களை கண்டித்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கு வந்த போலீசார், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் வாக்குச்சாவடியில் பணிபுரிந்த அலுவலர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

  பா.ம.க. சின்னம் மறைப்பு

இதேபோல் கன்னிவாடியை அடுத்த சுரைக்காய்பட்டி வாக்குச்சாவடியில் உள்ள வாக்குப்பதிவு எந்திரத்தில் பா.ம.க. வேட்பாளர் திலகபாமாவின் பெயர், புகைப்படம், சின்னம் ஆகியவை கருப்பு நிற ஸ்டிக்கரால் மறைக்கப்பட்டிருந்தது.

இதனால் வாக்களிக்க வந்த வாக்காளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலருக்கு புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சின்னத்தை மறைத்தவர்கள் தொடர்பாக தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் கன்னிவாடி போலீஸ் நிலையத்திலும் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்