கம்பம் அருகே விலை வீழ்ச்சியால் குப்பையில் கொட்டப்படும் புடலங்காய்

கம்பம் அருகே விலை வீழ்ச்சியால் புடலங்காய்கள் குப்பையில் கொட்டப்பட்டன.

Update: 2021-04-07 15:00 GMT
கம்பம்:
கம்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தென்னை, வாழை, திராட்சைக்கு அடுத்தபடியாக பீட்ரூட், நூக்கல், முள்ளங்கி, புடலங்காய், வெண்டைக்காய், கத்தரிக்காய், தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. 
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை கை கொடுத்ததால் நிலத்தடிநீர் மட்டம் உயாந்தது. இதையடுத்து கம்பம், நாராயணத்தேவன்பட்டி, சுருளிப்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் பல்வேறு காய்கறிகளை சாகுபடி செய்தனர். சில விவசாயிகள் புடலங்காயை சாகுபடி செய்தனர். தற்போது புடலங்காய் அறுவடை செய்யப்பட்டு வருகிறது. 
இந்தநிலையில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் இருந்து மதுரை, திருச்சி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுகளுக்கு புடலங்காய் வரத்து அதிகமாக உள்ளது. இதனால் மார்க்கெட்டில் புடலங்காய் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. 
அதன்படி, ஒரு கிலோ புடலங்காய் ரூ.8-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகளிடம் ஒரு கிலோ புடலங்காய் ரூ.4 முதல் ரூ.6 என்ற விலைக்கு கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும் பல்வேறு இடங்களில் கொள்முதல் செய்ய வியாபாரிகள் வராததால் புடலங்காய்களை விவசாயிகள் குப்பையில் கொட்டி சென்றனர்.

மேலும் செய்திகள்