காட்டுநாயக்கன் சமூகத்தினர் மறியல் போராட்டம்

பாதையை அடைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காட்டுநாயக்கன் சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் வடலூர்-விருத்தாசலம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2021-04-07 17:40 GMT
வடலூர், 

வடலூர் கோட்டக்கரை கோழிப்பள்ளம் பகுதியில் காட்டுநாயக்கன் சமூகத்தை சேர்ந்த 60 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் வசிக்கும் பகுதியில் இருந்து வடலூர் பஸ் நிலையம் மற்றும் கடைகளுக்கு வந்து செல்லும் வகையில் பாதை உள்ளது. இந்த பாதையை தான், அவர்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தனர்.  இந்த நிலையில் அந்த பாதையை தனிநபர் ஒருவர் அடைத்து சுற்றுச்சுவர் கட்டி வருவதாக தெரிகிறது. இதற்கு காட்டுநாயக்கன் சமூகத்தை சேர்ந்த மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து நேற்று காலையில் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் காலை 10 மணி அளவில் வடலூர்-விருத்தாசலம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

போக்குவரத்து பாதிப்பு 

இந்த போராட்டத்தால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.  இது பற்றி தகவல் அறிந்ததும் வடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மரியசோபி மஞ்சுளா மற்றும் போலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார், இது தொடர்பாக சம்பந்தபட்ட துறை அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு, காட்டுநாயக்கன் சமூகத்தினர் கலைந்து சென்றனர். பின்னர் அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது. 

மேலும் செய்திகள்