பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட போதை ஆசாமியை கைது செய்யக்கோரி வியாபாாிகள், பா.ம.க.வினர் தர்ணா

ெபண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட போதை ஆசாமியை கைது செய்யக்கோரியும், போலீசாரை கண்டித்தும் வியாபாரிகள், பா.ம.க.வினர் ஆரணி டவுன் போலீஸ் நிலையம் முன்பு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-04-07 18:15 GMT
ஆரணி

கையை பிடித்து இழுத்தார்

ஆரணிைய அடுத்த அக்ராபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயேந்திரன். இவர், ஆரணியில் லிங்கப்பன் தெருவில் நகை அடகுக்கடை நடத்தி வருகிறார். இவரின் மனைவி ஹேமலதா (வயது 40). இவர், நேற்று அடகுக்கடைக்கு வந்து விட்டு, மார்க்கெட் ரோட்டில் உள்ள ஒரு பாத்திரக்கடைக்குச் சென்று அமர்ந்திருந்தார். அப்போது ஆரணி அம்பேத்கர்நகர் பகுதியைச் சேர்ந்த குமாரின் மகன் மணிவண்ணன் (30) என்பவர் பாத்திரக்கடைக்குச் சென்று, அங்கிருந்த ஹேமலதாவின் கையைப் பிடித்து இழுத்து, ஆபாசமாகப் பேசி மிரட்டல் விடுத்துள்ளார். 

இதுகுறித்து அங்கிருந்த வியாபாரிகள் ஆரணி டவுன் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார், ஓட்டு எந்திரங்கள் வைத்துள்ள வாக்கு எண்ணும் மையத்துக்குச் சென்றுள்ளதால் போலீசார் யாரும் காவல் நிலையத்தில் இல்லை எனக்கூறப்படுகிறது. 

திடீர் தர்ணா

இதற்கிடையே, ஹேமலதாவின் சொந்த ஊரான அக்ராபாளையம் கிராமத்தைச் சேர்ந்த பா.ம.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் மற்றும் நகை அடகுக்கடை வியாபாரிகளும் திரண்டு வந்து, ஆரணி டவுன் போலீஸ் நிலையம் முன்பு தரையில் அமர்ந்து இரவு 8 மணியில் இருந்து 9 மணிவரை திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ெபண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட போதை ஆசாமி மீது போலீசார் நடவடிக்கை எடுத்து, கைது செய்ய வேண்டும், என வலியுறுத்தினர். மேலும் போலீசாரை கண்டித்தும் கோஷம் எழுப்பினர். 

தகவல் அறிந்ததும் ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு கோட்டீஸ்வரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணமூர்த்தி, மகேந்திரன் மற்றும் போலீசார் வந்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். மணிவண்ணன் குடிபோதையில் இருந்ததால் அவரை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை. காலை அழைத்து வந்து கைது செய்கிறோம், எனப் போலீசார் கூறியதும் தர்ணா போராட்டத்தை கைவிட்டு வியாபாரிகள், பா.ம.க.வினர் கலைந்து சென்றனர். 

இந்த சம்பவம் ஆரணியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்