அ.தி.மு.க.-தி.மு.க.வினர் மோதல்; 26 பேர் மீது வழக்கு

திருப்புவனம் அருகே அ.தி.மு.க.-தி.மு.க.வினர் நேருக்கு நேர் மோதி கொண்டனர். இது தொடர்பாக இருதரப்பை சேர்ந்த 26 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2021-04-07 19:55 GMT
திருப்புவனம்,

திருப்புவனம் அருகே அ.தி.மு.க.-தி.மு.க.வினர் நேருக்கு நேர் மோதி கொண்டனர். இது தொடர்பாக இருதரப்பை சேர்ந்த 26 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கார் கண்ணாடி உடைப்பு

திருப்புவனம் அருகே உள்ள பழையனூர் போலீஸ் சரகத்தை சேர்ந்தது வயல்சேரி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 48). இவர் அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை மாவட்ட துணைச்செயலாளராக உள்ளார். 
சட்டமன்ற தேர்தலையொட்டி வாக்கு சேகரிப்பதில் இவருக்கும், தி.மு.க.வினருக்கும் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. தேர்தல் நாளான நேற்று முன்தினம் மாலை வயல்சேரியில் உள்ள ரேஷன் கடை முன்பு ராமகிருஷ்ணன் நின்றிருந்தார்.
அப்போது அங்கு வந்த தி.மு.க.ஆதரவாளர்கள் ராமகிருஷ்ணனின் கார் கண்ணாடியை இரும்பு கம்பியால் உடைத்தனர்.. இதை தட்டி கேட்ட அவரை திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இது குறித்து ராமகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் அதே ஊரை சேர்ந்த லட்சுமணன், பாலகணேஷ் உள்பட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

26 பேர் மீது வழக்கு

இந்த நிலையில் நேற்று ராமகிருஷ்ணன் மற்றும் சிலர் சேர்ந்து தி.மு.க.வை சேர்ந்த சக்திவேல்(41), அவரது மனைவி முத்துப்பேச்சி(35) ஆகியோரை உருட்டுக்கட்டையால் தாக்கினார்கள். இது குறித்து சக்திவேல் கொடுத்த புகாரின் பேரில் ராமகிருஷ்ணன், ஈஸ்வரன் உள்பட 14 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து உள்ளனர்.
இதற்கிடையே ராமகிருஷ்ணனின் தந்தை நாராயணன் என்பவரை சிலர் மண்வெட்டியால் தாக்கி உள்ளனர்.. இதுகுறித்து ராமகிருஷ்ணனின் மனைவி பிரியா கொடுத்த புகாரின் பேரில் சக்திவேல், மோகன் உள்பட 4 பேர் மீதும் பழையனூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பாபு வழக்குபதிவு செய்து உள்ளார். 3 புகார்களையும் சேர்த்து மொத்தம் 26 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.

ஆஸ்பத்திரியில் அனுமதி

இதற்கிடையே தி.மு.க.வினர் தாக்கியதில் காயமடைந்த அம்பலம் (60) சிவகங்கை அரசு மருத்துவமனையிலும், நாராயணன் (75) மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையிலும், அ.தி.மு.க.வினர் தாக்கியதில் காயமடைந்த சக்திவேல், அவரது மனைவி முத்துப்பேச்சி ஆகியோர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 
இந்த சம்பவம் நடைபெற்ற இடத்தை மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரமாணிக்கம், போலீஸ் இன்ஸ்பெக்டர் சரிதாபாலு ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். அ.தி.மு.க.-தி.மு.க.வினர் மோதலால் வயல்சேரி கிராமத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்