கொங்கணாபுரம் அருகே தொழிலாளி கொலை வழக்கில் கணவன், மனைவி கைது

கொங்கணாபுரம் அருகே தொழிலாளியை கழுத்தை அறுத்து கொலை செய்த வழக்கில் கணவன், மனைவி கைது செய்யப்பட்டனர். மேலும் 9 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2021-04-07 22:32 GMT
எடப்பாடி:
கொங்கணாபுரம் அருகே தொழிலாளியை கழுத்தை அறுத்து கொலை செய்த வழக்கில் கணவன், மனைவி கைது செய்யப்பட்டனர். மேலும் 9 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தொழிலாளி
சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தை அடுத்த செங்கான்வளவு பகுதியை சேர்ந்தவர் தங்கவேலு (வயது 55). கரும்பு வெட்டும் கூலித்தொழிலாளி.
இவரது மகன் பிரகாஷ் (25). கரைக்காடு பகுதியை சேர்ந்த செல்வம் மகள் சந்தியா.
பிரகாசும், சந்தியாவும் காதலித்து வந்தனர். சந்தியாவை கடந்த மாதம் 13-ந்தேதி பிரகாஷ் அழைத்து சென்று விட்டார். இதுகுறித்து செல்வம் (43) கொங்கணாபுரம் போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் சந்தியாவை கண்டுபிடித்து பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.
கொலை
அதைத்தொடர்ந்து சில நாட்களிலேயே சந்தியா மீண்டும் பிரகாசுடன் சென்று விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த செல்வம், இவரது மனைவி செல்வி (40) மற்றும் அவரது உறவினர்கள் நேற்று முன்தினம் தங்கவேலின் வீட்டிற்கு சென்று தகராறு செய்து கத்தியால் தங்கவேலுவின் கழுத்தை அறுத்து விட்டு தப்பி சென்று விட்டனர்.
அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் தங்கவேலு இறந்து போனார்.
கைது
இதுகுறித்து கொங்கணாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். கொலையாளிகளை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் இந்த கொலை தொடர்பாக செல்வம், செல்வி ஆகியோரை கொங்கணாபுரம் போலீசார் கைது செய்தனர். பின்னர் எடப்பாடி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த கொலை வழக்கில் தலைமறைவான 9 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்